சென்னை: பாசன பரப்பு, பால், முட்டை உற்பத்தி அதிகரிப்பு என வேளாண் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5 வேளாண் பட்ஜெட்கள் அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சியில் சராசரியாக 1.36% ஆக இருந்த வேளாண் வளர்ச்சி, தற்போது 5.66% ஆக உயர்ந்துள்ளது. திமுக அரசின் வேளாண் வளர்ச்சி திட்டங்களால், கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தை எட்டியது. பாசனம் பெற்ற நில பரப்பு 36.07 லட்சம் ஹெக்டரில் இருந்து 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து உணவு பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன.
5,427 கி.மீ. நீளத்துக்கு சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 2.10 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். 8,540 சிறுபாசன குளங்கள் தூர்வாரப்பட்டு, 2,382 புதிய பண்ணை குட்டைகள், 2,474 ஆழ்துளை, குழாய் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டன. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10,187 கிராம ஊராட்சிகளில், ரூ.786.86 கோடியில் 47,286 ஏக்கர் தரிசு நிலங்கள் மீள்சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டன.
213 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் தேசிய வேளாண் சந்தை (e-NAM) தளத்துடன் இணைக்கப்பட்டு, ரூ.6,636 கோடியில் 22.71 லட்சம் டன் விளைபொருள் வர்த்தகம் நடைபெற்று 19 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர்.
வேளாண் துறை இயந்திரமயமாக்கல் திட்டப்படி ரூ 499.45 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளன. ரூ.96.56 கோடியில் 1,205 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சிறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. 1,652 புதிய வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இ-வாடகை சேவை மையங்கள் மூலம் 69,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
27 மாவட்டங்களில் 917 ஏரிகள் ரூ.1,212 கோடியிலும், 814 சிறுபாசன ஏரிகள் ரூ75.59 கோடியிலும் சீரமைக்கப்பட்டன. 24 மாவட்டங்களில் 88 தடுப்பணைகள் ரூ.519 கோடியில் கட்டப்பட்டன. ஓராண்டில் 8,362 டன் பால் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், திமுக அரசின் திட்டங்களால் 10,808 டன்னாக அதிகரித்துள்ளது.
பள்ளி சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வாரம் 5 நாட்களும் 5 முட்டைகள் வழங்க முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். தேவைக்கேற்ப முட்டைகள் தாராளமாக கிடைக்கும் வகையில் 350 கோடி முட்டைகள் கூடுதலாக உற்பத்தியாகின. ரூ.1,428 கோடியில் 72 மீன் இறங்கு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தரங்கம்பாடி, ராமேசுவரம், திருவொற்றியூர் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழில் சிறக்க பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளால், வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மீனவர் நலன் என அனைத்து துறைகளிலும் சிறந்து, ஒட்டுமொத்த வளர்ச்சியில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.