சென்னை: சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், வேலூரில் உள்ள காவல் பயிற்சியகத்துக்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி – முத்தாத்தாள் நாச்சியார் தம்பதியரின் மகளாக 1730-ம் ஆண்டு பிறந்தார் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். 1746-ம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியானார். 1772-ம் ஆண்டு ஆங்கிலேயர் சிவகங்கையின் மீது போர் தொடுத்த போது, மன்னர் முத்துவடுகநாதர் வீர மரணமடைந்தார்.
பின்னர், வேலுநாச்சியார், மைசூர் மன்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் அக்காலத்தில் திண்டுக்கல் பகுதியைஆண்ட கோபால் நாயக்கர் ஆகியோர் உதவியுடன் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வென்று சிவகங்கைச் சீமையை 1780-ம் ஆண்டு மீட்டார். அதன்பின், 16 ஆண்டுகள் சிவகங்கைச் சீமையைச் சிறப்பாக ஆட்சி செய்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி” வீரமங்கை வேலுநாச்சியார் 1796 டிசம்பர் 25ம் தேதி மறைந்தார்.
வேலுநாச்சியாரின் வீரத்தை வருங்காலத் தலைமுறையினர் அறிந்து போற்றும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அரசின் சார்பில் ரூ.50 லட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வேலுநாச்சியார் சிலையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் அறிவிப்பு: சிலை திறப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி – ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும். மண் – மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும், அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும்” என தெரிவித்துள்ளார்.
சிவகங்கை சமஸ்தானம் நன்றிசிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி டிஎஸ்கே.மதுராந்தகி நாச்சியார், வேலுநாச்சியார் சிலை திறப்புக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.