வேலூர்: வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாமில் வீட்டு மனை பட்டா கேட்டு மக்களுடன் சேர்ந்து திமுக கவுன்சிலர் போராட்டத்தி ல் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திமுக அரசுக்கு எதிராக திமுக கவுன்சிலர் ஒருவரே திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வரும் நிலையில், முகாமை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர்கள் நேரடியாக ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 23, 24-வது வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ரங்காபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை 25) நடைபெற்றது. இதில், 24-வது வார்டு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் பகுதியில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதிகள் நிறைவேற்றக் கோரி திருமண மண்டப வாசலில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களோடு சேர்ந்து 24-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அடுத்து முகாம் நடைபெறும் இடத்துக்கு வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் சென்றதுடன், தர்ணாவில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டா வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த பிரச்சினை குறித்து விசாரித்தபோது, 24-வது வார்டுக்கு உட்பட்ட மூலக் கொல்லை பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது. அவர்கள் வசிக்கின்ற இடம் மேய்க்கால் புறம்போக்காக இருக்கிறது. அந்த இடத்தில் பட்டா வழங்க வேண்டுமானாலும் அதற்கு ஈடாக வேறு ஓர் இடத்தில் இடம் வழங்க வேண்டும். இதனால், பட்டா வழங்குவதில் இதுவரை ஆட்சியில் இருந்த யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது, முகாம் நடைபெறும் நாளில் போராட்டம் நடத்தினால் தங்களுக்கு முடிவு கிடைக்கும் என்ற எண்ணத்தில் விடிவு கிடைக்கும் என கருதி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தெரியவந்தது. இந்தப் பிரச்சினை தொடர்பாக வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு, ”பட்டா விவகாரம் எதுவும் என் கவனத்துக்கு வரவில்லை. அந்த கவுன்சிலருக்கும் கட்சி விசுவாசம் எதுவும் கிடையாது. கட்சியைத் தான் அசிங்கப்படுத்துகிறார். முதல்வர் வரும்போது போராட்டம் நடத்துவேன் என்று அதிகாரிகளை மிரட்டுகிறார். முகாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பட்டா பெயர் மாற்றத்தை ஒரு மணி நேரத்தில் செய்துகொண்ட ஒருவர் முதல்வரை பாராட்டுகிறார்.
ஆட்சிக்கு நல்ல பெயரை கெடுக்கவே எப்போதும் இப்படி செயல்படுகிறார். மாமன்ற கூட்டத்திலும் அவர் இப்படித்தான் நடந்து கொள்கிறார். அவர் கான்டிராக்ட்ராக இருக்கிறார். அவருக்கெல்லாம் கவுன்சிலர் சீட் கொடுக்க வேண்டாம் என்றேன். ஆனால், மாவட்ட செயலாளர் தான் கொடுத்தார். எங்களிடம் குறையை சொல்லத்தான் அவருக்கு கஷ்டமாக இருக்கிறது என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கலாமே.
மாவட்ட ஆட்சியர் 5 தொகுதிகளுக்கும் தேவையானதை செய்து கொண்டுதான் இருக்கிறார். இந்த பிரச்சினையை கேள்விப்பட்டதும் ஆட்சியர் என்னிடம் தொடர்புகொண்டு பேசினார். நாளை நேரில் சென்று ஆய்வு செய்வதாக கூறியுள்ளார். நானும் நேரில் பார்த்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.
வேலூர் எம்எல்ஏ எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து திமுக கவுன்சிலர் சுதாகரை தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘‘நான் மக்கள் பிரச்சினைக்குத்தான் போராடுகிறேன். என் வார்டு மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே மூன்று முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை. என் வார்டுக்கு எம்எல்ஏ எதுவும் செய்யவில்லை. என் வார்டு பிரச்சினை எல்லாம் அவருக்கு தெரியாது.
நான் ஏன் இந்த ஆட்சியை அசிங்கப்படுத்தப் போகிறேன். என் சொந்த பிரச்சினைக்காகவா போராட்டம் நடத்துகிறேன். நான்தான் தேவையில்லாமல் அரசியலுக்கு வந்துவிட்டேன். என் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேண்டாம் என்றார்கள். இப்போது கூட அவர்களுக்கு என் மீது வருத்தம் தான். எனக்கு எம்எல்ஏ மீது தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. தினமும் வீட்டுக்கு மக்கள் வருகிறார்கள். அவர்களுக்காகத் தான் நான் பேசுகிறேன்” என்றார்.