சிவகாசி: பட்டாசு தொழிலாளர்களுக்கு உற்பத்தி குறித்த நேரடி செயல்முறை பயிற்சியும், வேதிப் பொருட்களின் விளைவு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த தொழிலக பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் அதன் தலைவர் கணேசன், காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ஏ.பி.செல்வராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியது: “பட்டாசு தொழிலில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் டான்பாமா சார்பில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மூலப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் பேரியம் நைட்ரேட்டுக்கு மாற்றாக வழங்கும் வீரியம் அதிகமுள்ள இறக்குமதி செய்யப்பட்ட வேதிப்பொருட்களை பயன்படுத்துவது விபத்துக்கு காரணமாக உள்ளது. வேதிப்பொருள் கலவை மற்றும் பில்லிங் செய்யும் இடங்களில் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை ஈடுபடுத்துவதால் 60 சதவீத விபத்துக்கள் நடக்கிறது.
இதை தவிர்க்க ஆபத்தான பணிகளில் இயந்திர பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். 70 பட்டாசு ஆலைகளில் முக்கிய பணிகள் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரோல் கேப், சோர்சா, மத்தாப்பு உள்ளிட்ட சில பட்டாசு உற்பத்தியில் இயந்திர பயன்பாடு அதிகரித்துள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற ஆலையில் 14 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். பேன்சி பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலையில் மிக்சிங், பில்லிங் பணிகளுக்கு கோட்டை சுவர் அறைகளும், உலர் களம், மேகசின் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் இருப்பதை உற்பத்தியாளர்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தால் நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சமும், ஈமச்சடங்கு செலவுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது. உரிமையாளர் ஜாமீன் மனு செய்யும் போது, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உரிமையாளர் சார்பில் ரூ.5 லட்சம் தனி நபர் காப்பீடு மற்றும் குழு காப்பீடும் செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவை ஏற்கிறது.
பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. என்ன உதவிகள் செய்தாலும் தொழிலாளர்களின் உயிரிழப்பை ஈடு செய்ய முடியாது. பாதுகாப்பு கட்டமைப்புகள் இல்லாத தொழிற்சாலைகளை தொழிலாளர்கள் புறக்கணிக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வையும் மீறி, உள் குத்தகை போன்ற விதிமீறல்கள் நடக்கிறது. அரசு நடவடிக்கையால் விபத்துக்கள் குறைந்தாலும், முழுமையாக தவிர்க்க உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சுற்றுச்சூழல் துறை உதவியுடன் 30 சதவீதம் மாசு குறைத்து பட்டாசு உற்பத்தி செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளோம். மேலும் பட்டாசு மாசு குறைத்து பேரியம் நைட்ரேட் பயன்பாடு மற்றும் சரவெடி உற்பத்திக்கு அனுமதி பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு விண்ணப்பித்து உள்ளோம். புவிசார் குறியீடு கிடைத்தால் பட்டாசு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். பட்டாசு விபத்துக்கள் இத்தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
தொழிலக பாதுகாப்பு பயிற்சியில் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி, வேதிப் பொருட்களை கையாள்வது குறித்தும் வாய்மொழியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு என பிரத்யேகமாக பட்டாசு ஆலையை தேர்வு செய்து வேதிப் பொருள் கலவை செய்யும் முறை, வெடிமருந்து செலுத்துதல் குறித்து தொழிலாளர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
என்ன வேதிப்பொருள் பயன்படுத்துகிறோம், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி செய்தால் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது” என்று அவர்கள் கூறினர்.