தூத்துக்குடி: வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை முதல்வர் ஈர்த்து வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (செப்.8) அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று விட்டு இன்று தமிழகத்தில் கால் வைத்துள்ளார். முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறோம் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்று நமது பலத்தை அங்கு காண்பித்ததால்தான் நமது ‘டாடி’யால் முதலீடுகளை ஈர்க்க முடிகிறது. இதற்கு முன்னால் சென்றபோது எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தார்கள், தமிழகத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு தெளிவான கணக்கு கிடையாது. எனவே, இது அவரது சாதனை அல்ல. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடிதான்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிக மிக மோசமான நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்தால், அவமானப்படுத்தினால் நாம் பாராட்டப்படுவோம் என காவல் துறை அதிகாரிகள் நினைத்து செயல்படுகிறார்கள். எனவே, முதல்வர் ஸ்டாலின் தனது கையில் இருக்கும் காவல் துறையை சரியாக வழிநடத்த வேண்டும். காங்கிரஸை சேர்ந்தவர்கள் நேற்று தென்பகுதியில் ஒரு கூட்டம் போட்டிருக்கிறார்கள். கூட்டம் போடுவதற்காகவாவது தென் பகுதி அவர்களுக்கு நியாபகம் வந்திருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஓட்டு திருடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் சொல்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்து கள்ள ஓட்டுக்கு மிகப் பிரம்மாண்டமான அங்கீகாரத்தை கொடுத்தது திமுகதான். கள்ள ஓட்டை கலாச்சாரமாகவே மாற்றிய திமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டு இவ்வாறு சிதம்பரம் பேசுகிறார்.
பாஜக புகுந்த மாநிலம் ஆமை புகுந்த மாநிலமாக மாறிவிடும் என்கிறார்கள். 17 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் புகுந்த மாநிலங்கள் சீரழிந்து போகும் என மக்கள் நினைத்ததால் தான் அவர்களை முற்றிலும் புறந்தள்ளியுள்ளனர். மக்களுக்காக போராடியதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இவ்வளவு போராடிய உங்களுக்கு கூட்டணியை விட்டு வெளியே வர தைரியம் இருக்கிறதா?
கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் கொள்கையை மறந்து திமுகவுடன் இருக்கிறார்கள். திருமாவளவனுக்கு பட்டியலின சமூகத்தினரை பற்றி கவலை கிடையாது. திமுகவுடனான கூட்டணி தான் அவருக்கு முக்கியம். திமுகதான் கூட்டணிக்காக கூட்டணி கட்சிகளின் கொள்கைகளை மறக்கடித்து தங்களுடன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது பெரிய குற்றமாகும்.
நாளைய தினம் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே, நாளைய தினம் நாட்டுக்கும், நமக்கும் மறக்க முடியாத தினமாகும். திமுகவையும், இங்குள்ள காங்கிரஸையும் மன்னிக்க முடியாத தினம். தமிழர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு எதிராக திமுகவை சேர்ந்தவர்கள் வாக்களிக்க போகின்றனர். ஜெர்மனியில் போய் தமிழர்களுக்கு அங்கீகாரம் கொடுப்போம் என்று முதல்வர் சொல்கிறார். இங்கே டெல்லியில் எங்கே அதிகாரம் கொடுக்கிறீர்கள். தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். முதல்வர் ஸ்டாலினை வருங்கால தமிழ் சமூகம் மன்னிக்காது.
அதிமுக – பாஜக கூட்டணி அமைத்துள்ளார்கள். அந்தக் கூட்டணி வலுவான கூட்டணிதான். அதிமுக உட்கட்சியில் சில பிரச்சினைகள் வந்தால், அதை அந்தக் கட்சி தீர்த்துக் கொள்ளும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.