சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் ஜெர்மனிக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதனால் வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே ஆதாரம்.
வெளிநாட்டு பயணங்களால் 36 ஒப்பந்தங்கள்: எனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழகம் அமைதியான மாநிலமாக, திறமையான இளைஞர்கள் உள்ள மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கும் மாநிலமாக உயர்ந்துள்ளதை தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளேன். இதுவரை. அமெரிக்க பயணத்தில் 19, ஸ்பெயினில் 3, ஜப்பானில் 7, ஐக்கிய அரபு அமீரகத்தில் 6, சிங்கப்பூரில் ஒன்று என மொத்தம் 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 30,037 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.18,498 கோடிக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இந்த 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ளன.
இதன் தொடர்ச்சியாகவே ஒரு வார பயணமாக தற்போது ஜெர்மனி, இங்கிலாந்துக்கு செல்கிறேன். முதலில் ஜெர்மனிக்கு செல்கிறேன். அங்கிருந்து செப்.1-ம் தேதி இங்கிலாந்து செல்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4ம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறேன். 8-ம் தேதி தமிழகம் திரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
எனது வெளிநாட்டு பயணங்களால் தமிழகத்துக்கு பயன் உண்டா என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேட்கிறார். அவர் தனது பயணம் போலவே இதுவும் இருக்கும் என்று கருதி பேசுகிறார். ஆனால், நான் கையெழுத்திடும் அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரப்போகின்றன, வந்திருக்கின்றன.
பிஹார் போல, தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. யார், என்ன சதி செய்தாலும், தமிழகம் முறியடிக்கும். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் அதிகம் வருகின்றனர்.
விஜய்யின் அரசியல் வருகை மற்றும் ‘திமுகவுக்கு தவெகதான் போட்டி’ என்று அவர் சவால்விட்டுள்ளது குறித்து நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பேச்சை குறைத்து, செயலில் நம் திறமையை காட்ட வேண்டும். சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வந்துள்ளது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக வெற்றியை திமுக கூட்டணி பெறும். அதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு முதல்வர் கூறினார்.