சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகளை செய்யவா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்வர் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகளை செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிப்பாரா?.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டைவிட மிக, மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா? அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தெலங்கானா (அமெரிக்கா – ரூ. 31,500 கோடி) மற்றும் கர்நாடகா (அமெரிக்கா – ரூ. 25 ஆயிரம் கோடி) முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஸ்டாலின், மார்ச் 2022-ல் துபாய்க்கு குடும்ப சுற்றுலா (6 நாட்கள்), மே மாதம் 2023-ல் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணம் (8 நாட்கள்), ஜனவரி மாதம் 2024-ல் ஸ்பெயின் சுற்றுப்பயணம் (10 நாட்கள்), ஆகஸ்ட் 2024-ல் அமெரிக்கா சுற்றுப்பயணம் (16 நாட்கள்) என்று மொத்தம் 4 முறை, 40 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது.
இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவையே. தமிழக அரசின் இன்றைய பத்திரிகை செய்தியின்படி 2021 முதல் இன்றுவரை சுமார் 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவை எங்கள் ஆட்சியில் போடப்பட்ட தொழில் முதலீடுகளின் தொடர்ச்சியே.
4 முறை வெளிநாடு சென்று இவர் சாதித்ததாக மார்தட்டிக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் 36 மட்டுமே.
நான் முதல்வராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். ஸ்டாலின், நான் வெளிநாடு சென்று வந்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்தது மட்டுமல்ல, அங்குள்ள கால்நடை பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதுபோன்றதொரு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை, சேலம் மாவட்டம், தலைவாசலில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கிக் காட்டினேன்.
அதை அழிக்கும் முயற்சியில் பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். எனவே, ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் உண்மையில் தமிழகத்திற்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படவில்லை என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.
அதேபோல், கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எனவே, ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை.
ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த ‘சின்ன கலைவாணர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விவேக்கின் நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது. ‘இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?’ என்று விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் ‘ஒன்றுமே இல்லை’’ என்று அவர்கள் பதில் அளிப்பார்கள். உடனே விவேக் ‘அதுதான் மக்களுக்கும்’ – என்பார்.
அதுபோல் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்கு சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து. எனவே இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப் பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்கு தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.