சென்னை: மெட்ரோ ரயில் மேம்பால தூண் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விபத்துக்கு, இரும்பு உபகரணம் பொருத்த வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், போரூர் அருகே மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட 2 தூண்கள், அதன் இணைப்புப் பாலம் நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்ததால் இடிந்தன. இந்த விபத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.
கான்கிரீட் தூண்கள் சாலையில் சரிந்து விழுந்ததையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விரைந்து சென்ற போக்குவரத்து போலீஸார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சாலையில் சரிந்த மெட்ரோ தூண்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரிகள் குழு விபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்று காலை நேரில் ஆய்வு நடத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறுகையில், “மெட்ரோ பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ஒரு தூண் விழுந்துள்ளது. இந்த தூண் பொருத்தப்பட்டு நீண்ட நாட்கள் ஆகின்றன. அதற்கு பக்கபலமாக `A’ வடிவ இரும்பு உபகரணம் பொருத்தப்பட்டிருந்தது.
அந்த இரும்பு உபகரணத்தை பொருத்துவதற்காக வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்கு உலோகத்தின் உறுதித்தன்மை இழப்புதான் காரணம். இதே போன்று வேறு எங்கேனும் உறுதித் தன்மையில் பிரச்சினை இருக்கிறதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல் துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து இணைப்புகளிலும் உறுதித் தன்மையை அதிகரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
எனவே, இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அர்ச்சுனன் தெரிவித்தார்.