குன்னூர்: குன்னூர் வெலிங்டனில் உள்ள எம்ஆர்சி ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற அக்னி வீரர்கள் 551 ராணுவ வீரர்கள் அணி வகுப்பில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் இந்திய ராணுவத்தின் பழமையான மற்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த காலாட் படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் உள்ளது. இங்கு அக்னி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5-வது படை பிரிவு அக்னி வீரர்கள் 31 வார பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். இன்று வெலிங்டன் பேரக்ஸ் ஸ்ரீ நாகேஷ் சதுக்கத்தில் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு அணி வீரருக்கும் அவர்களது பயிற்சியின்போது புகட்டப்பட்ட ஒழுக்கம் மற்றும் தொழில்முறையின் முக்கிய பண்புகளை பிரதிபலிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. கர்நாடக – கேரளா ராணுவ கமாண்டிங் முதன்மை அலுவலர் மேஜர் ஜெனரல் வி.டி.மேத்யூ, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டெர் கிருஷ்ணேந்து தாஸ், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து உப்பு உட்கொண்டு பகவத் கீதை, பைபிள், குரான் மற்றும் தேசிய கொடி மீது 551 அக்னி வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்து கொண்டனர். பயிற்சியில் சிறந்து விளங்கிய அக்னி வீரர்களுக்கு கமாண்டிங் முதன்மை அலுவலர் வி.டி.மேத்யூ பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இவர்கள் நாட்டின் எல்லை பகுதியில் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில், பெற்றோர், ராணுவ வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.