குன்னூர்: வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி 1905-ல் குவெட்டாவில் நிறுவப்பட்டது. பின்னர் 1947-ல் அது வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. இந்தக் கல்லூரி இந்தியாவின் முப்படை அதிகாரிகளுக்கான முன்னணி பயிற்சி நிறுவனமாகும்.
இங்கு, ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகளுக்கும், நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும் தலைமைத்துவம், கூட்டாக செயல்படும் திறன், வியூகங்கள் வகுத்தல், பணியாளர் நிர்வாகம் ஆகியவற்றின் உயர் நுணுக்கங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி நேற்று பொறுப்பேற்றார். இப்பொறுப்பில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். டிசம்பர் 1988-ல் இந்திய ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் இலகு காலாட்படையில் அதிகாரியாக இணைந்தார்.
அதிக பதக்கங்களை பெற்ற மூத்த ராணுவ அதிகாரியான ஜெனரல் மணீஷ் எரி, இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர். கிழக்கு லடாக்கில் உள்ள சுஷுலில் அதிஉயர பகுதிகள், வடக்கு பிராந்தியத்தில் பனிச் சிகரங்களைக் கொண்ட பகுதிகள் போன்றவற்றில் அவர் ராணுவ பட்டாலியன்களுக்கு தலைமை வகித்துள்ளார்.
நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில், ராணுவ காலாட்படையின் மலைப்பிரிவில் ஒரு புதிய பட்டாலியனை உருவாக்கி அதனை வழிநடத்தினார். பின்னர் கிழக்கு பிராந்தியத்தில் கஜ்ராஜ் படை வகுப்புக்கு தலைமை வகித்தார். தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (செயல்பாடுகள்), ராணுவ தென்மேற்கு ஆணையகத்தின் (காமாண்டின்) தலைமை நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் ராணுவப் பிரிவின் வியூக திட்டமிடலுக்கான தலைமை இயக்குநர் ஆகிய நிலைகளிலும் பணியாற்றியுள்ளார்.
தற்போது தலைமை வகிக்கும் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார். லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி கூறும்போது, ‘‘பாதுகாப்புக் கல்வி, கூட்டாக செயல்படுதல் போன்றவற்றில் முப்படை அதிகாரிகளுக்கும் மிகச்சிறந்த பயிற்சிக் கல்லூரியாக இக்கல்லூரியை இயக்க உறுதியேற்று உள்ளேன்’’ என்றார்.