சேலம்: சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக, அதிரடிப்படையினருடன் எஸ்பி. கோபாலகிருஷ்ணன், மேட்டூரை அடுத்த பாலாறு வனப்பகுதிக்கு 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதி சென்றார். தங்களுக்கு வழிகாட்டுவதற்காக, இன்ஃபார்மர்களாக மேட்டூர் கிராமங்களைச் சேர்ந்த 16 பேர், தனது உதவியாளர் மேட்டூர் கிளமென்ஸ் உள்ளிட்டோரையும் எஸ்பி. கோபாலகிருஷ்ணன் உடன் அழைத்துச் சென்றார். அதிரடிப்படையினர் சென்ற வேன், பாலாறு அருகே சுரைக்காய் மடுவு என்ற இடத்தில் வீரப்பன் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி வெடித்துசிதறியது.
இளம் வயதிலேயே கணவரை இழந்தனர்: இதில், போலீஸார், வனத்துறையினர் உள்ளிட்ட 7 பேரும், கிராம மக்களில் 15 பேரும் உடல் சிதறி இறந்தனர். அதே வேனில் பயணித்த எஸ்பி. கோபாலகிருஷ்ணன், அவரது உதவியாளர் கிளமென்ஸ், வழி காட்டியாகச் சென்ற கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த இருசார் ஆகிய 3 பேர்மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப் பினர். அப்போது, வழிகாட்டியாக சென்று உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. காயமடைந்த கிளமென்ஸ், இருசார் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

கூலி வேலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த அந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், இளம் வயதிலேயே கணவரை இழந்ததுடன், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்றுவரை அந்த குடும்பங்கள், வறுமையில் இருந்து கரையேற முடியாமல் தவித்து வருகின்றன.
அந்த கோரத் தாக்குதலில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினர் கூறியதாவது: ஆடு மேய்ப்பது, கூலி வேலை என வாழ்ந்து வந்த போது, வனத்துக்குள் சென்று வர வழிகாட்ட வர வேண்டும் என்று அதிரடிப்படை போலீஸார் எங்கள் வீட்டு ஆண்களை மிரட்டி அழைத்துச் செல்வார்கள். அதுபோலதான், 1993-ம் ஆண்டு ஏப். 9-ம் தேதியும், கட்டாயப்படுத்தி, மிரட்டி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் எங்கள் வீட்டு ஆண்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு, துண்டு துண்டாக சிதைந்திருந்த உடலை, மூட்டை போல கட்டி எங்களிடம் கொடுத்தனர்.
அரசாங்கம் அனாதையாக விட்டது ஏன்? – வறுமை தாண்டவமாட, கைகளில் குழந்தைகளோடும், கர்ப்பிணியாகவும் வாழ வழி தெரியாமல் தவித்தோம். உயிரிழந்த போலீஸாரின் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்த அரசாங்கம், எங்கள் குடும்பங்களை மட்டும் அனாதையாக விட்டது ஏன்? எங்கள் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் உதவி செய்து, எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நா தழுதழுத்தபடி கூறினர்.
கண்ணிவெடி தாக்குதலில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பிய இருசார் (76) கூறும்போது, ‘‘அதிரடிப் படையுடன் சென்ற போது, வீரப்பன் வைத்த கண்ணிவெடியில் சிக்கி, பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தேன். காயத்துக்கு சிகிச்சை அளிக்க ரூ.25 ஆயிரம் மட்டும் வழங்கினர். அன்று போலீஸாரின் பல்வேறு கொடுமைகளை அனுபவித்ததால், தற்போது 76 வயதில் பல்வேறு உடல் பிரச்சினைகளுடன், ஆடு மேய்த்து வாழ்ந்து வருகிறேன்’’ என்றார்.
அதிரடிப்படை எஸ்பி., கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்து கண்ணிவெடி தாக்குதலில் உயிர் தப்பிய கிளமென்ஸ் கூறும்போது, ‘‘கண்ணிவெடி தாக்குதலில் பலத்த காயமடைந்த எனக்கு சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கிவிட்டு, வேறு எந்த நிவாரணமும் தரவில்லை.
75 வயதில் கூலி வேலைக்கு சென்று வாழ்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, எனது மகள் நான்சி அர்ச்சனாவை எம்எஸ்சி., வேதியியல் படிக்க வைத்துள்ளேன். அதிரடிப்படையினருக்கு உதவியாக பணியாற்றிய என்னுடைய குடும்பத்துக்கு உதவிடும் வகையில் எனது மகளுக்கு அரசுப் பணி வழங்கினால், எனது குடும்பம் வறுமையில் இருந்து மீளும்’’ என்றார்.