சென்னை: வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலத்தை வாங்கியவர்களுக்கு, அவர்கள் தாங்கும் அளவிலான தொகை நிர்ணயிக்கப்பட்டு நிலம் விடு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து, தலைமைச்செயலகத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தால் நீண்ட நாட்களுக்கு முன் கையகப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு அது முழுமையாக நிறைவேறாத சூழலில் அந்த நிலங்களை வாரியம் பயன்படுத்த முடியவில்லை. அதேநேரம் அதன் உரிமையாளர்களும் முழு உரிமை எடுக்க முடியவில்லை என்ற சூழல் இருந்தது.
இது முதல்வர் முதல்வர் கவனத்துக்குச் சென்றதும், எல்லோருக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரே மாதிரி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதற்காக வீட்டுவசதி வாரியம், வீட்டுவசதித் துறை இணைந்து அந்த நிலங்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டன. இதுதவிர்த்த 10,575 ஏக்கர் நிலம் எதிர்காலத்தில் எடுக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்ட நிலமாகும். இந்த இடத்தை அந்த நில உரிமையாளர்கள் மற்றவர்களுக்கு சிறிது, சிறியதாக விற்றுவிட்டு போய்விட்டார்கள்.
இதில், வாங்கியவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், ஒரே ஒரு சுற்றறிக்கை மூலம் அவர்களுக்கு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் போக மீதமுள்ள நிலம் தான் 5 வகையாக பிரிக்கப்பட்டது. இதில் ஐந்தாவது வகை என்பது வீட்டுவசதி வாரியம் முழுமையாக அதை கையகப்படுத்தி, அதில் சில மேம்பாடுகள் செய்திருக்கிறது. அதை பொறுத்தவரை வீட்டு வசதி வாரியம் முழுமையான உரிமையை கொண்டுள்ளது. முதல் இரண்டு வகை என்பது நோட்டீஸ் கொடுக்கப்பட்டதுடன் நின்றுள்ளது. அதற்குமேல் வீட்டு வசதி வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது, 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க முடியாது. மேலும், அந்த நிலங்கள் சிறிது சிறிதாக விற்கப்பட்டுவிட்டன. அதை எடுப்பதாக இருந்தால், ஆயிரக்கணக்கான வீடுகளை இடிக்க வேண்டியதிருக்கும்.
இதில் நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த 1 மற்றும் 2-வது வகை நிலங்களை நாம் விடுவிப்பது என்பது கொள்கை முடிவாக எடுக்கப்பட்டது. அதன்படி, 4,396.44 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 743 ஏக்கருக்கு அரசாணை வழங்க ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிலவற்றில், நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, அதையும் பகுப்பாய்வு செய்துவிட்டு, அதற்குப் பிறகுதான் அதில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கடுத்த 3 மற்றும் 4-வது வகையை பொறுத்தவரை, அதற்காக 2 ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதில் பல நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவுகள் இருக்கின்றன. அதன்மீது வீட்டுவசதி வாரியம் செய்த விவரங்கள் அனைத்தும் இருக்கின்றன. இத்தனையும் அவர்கள் ஆய்வு செய்து அவர்கள் கொடுக்கும் பரிந்துரையின்படி அந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
நவம்பர் மாதத்துக்குள் அவர்கள் பரிந்துரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதை பின்பற்றி வீட்டுவசதி வாரியம் டிசம்பர், ஜனவரிக்குள் மீதமுள்ள அந்த நிலத்தையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க முடியும். இதில் வாரியத்துக்கோ, அரசுக்கோ எவ்வித நஷ்டமும் ஏற்படக் கூடாது. வாரியம் செலவழித்த தொகை, அதற்கான வட்டி கிடைக்க வேண்டும்.
தொகை அது மிக நியாயமானதாக அவர்கள் தாங்கக்கூடிய சக்தி படைத்ததாக அது இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகத்தான் 16 இடங்களில் புகார்பெட்டி வைத்து அதில் மனுக்கள் போடுங்கள் என்று தெரிவித்தோம். அதை அடிப்படையாக வைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஒருவேளை புகார்பெட்டியில் போடாமல் இருந்தாலும் கூட இதே வகையில் அவர்கள் தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். ஒரு சிறு தவறும் கூட ஏற்படக்கூடாது. யாருடைய பரிந்துரையின்பேரிலும் இது நடை பெற கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.