சென்னை: “சாதி, மதம் கடந்து தங்களுடைய குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர்நிலைகளை, காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக் கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை தயவுசெய்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்துப் பேசக்கூடாது. முதல்வரே நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு முதல்வர் கொடுக்க வேண்டும்,” என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார்.
சென்னையை அடுத்த பனையூரில் தவெக மாநில செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விஜய் பேசியது: “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி, மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர் காய நினைக்கிறது பாஜக. அவர்களின் இந்த விஷமத்தனமான வேலைகள், வேறெங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது.
சமூக நீதி, நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆழமாய் வேரூன்றிய மண் இந்த தமிழ்நாட்டு மண். எனவே, இங்கு தந்தை பெரியாரை அவமதித்தோ, அறிஞர் அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ, அல்லது தமிழ்நாட்டின் மதிப்புக்குறிய தலைவர்களை வைத்தோ அரசியல் செய்ய நினைத்தால், அது பாஜக ஒருபோதும் வெற்றி பெறவே இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக்குலைந்து கூட்டணிக்குப் போக திமுகவோ, அதிமுகவோ இல்லை தவெக.
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி எப்போதும் திமுக மற்றும் பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல உறுதியான தீர்மானம்.
நம் அனைவருக்குமே வாழ்வாதாரம் உள்ளது. ஆனால், நம் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் மிகவும் முக்கியமானவர்கள் விவசாயிகள். அந்த விவசாயிகள் உடன் நிற்க வேண்டியது நமது கடமை. அந்த கடமையை நாம் கண்டிப்பாக செய்தாக வேண்டும். விவசாயிகள் பக்கம் எப்போதும் நிற்போம். பரந்தூர் விமான நிலைய பிரச்சினை தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். பரந்தூர் பகுதியில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு புதிய விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் வருடக் கணக்கில் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் தவெக சார்பாக நான் சென்று அவர்களைச் சந்தித்தேன். அதற்கு அடுத்தநாளே மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அரசு சார்பாக ஒரு விளக்க அறிக்கை வந்தது. அந்த அறிக்கையில் 1005 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால், விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இருக்காது என்பதுபோல கூறியிருந்தனர். மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் என்ன சார்? ஒன்று, அந்த இடத்தில் விமான நிலையம் வருகிறது என்று சொல்ல வேண்டும். இல்லை, அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்று சொல்ல வேண்டும்.
இரண்டுமே அந்த அறிக்கையில் இல்லை. வெறும் 1,005 குடும்பங்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமாக போய்விட்டதா சி.எம். சார்? 15,000 மக்கள், அந்த மக்களும் நம்ம மக்கள்தானே? ஏன் அந்த அக்கறையோ, மனிதாபிமானமோ உங்களிடம் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமா? நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை, மிகப்பெரிய நீர்நிலைகளை, ஆயிரக்கணக்கான வீடுகளை, அவர்களது வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு அந்த இடத்தில்தான் விமான நிலையம் கட்டியே ஆகவேண்டும் என்ன சார் அவசியம் இருக்கிறது? அப்புறம் எப்படி சார் உங்களை மக்களின் முதல்வர் என்று நாக்கூசாமல் சொல்கிறீர்கள்?
இதில், உங்களுக்கும் இந்த பரந்தூர் விமான நிலையம் கட்டுவதற்கும் சம்பந்தம் இல்லாதது போல காட்டிக் கொள்கிறீர்கள். ஆனால் விமான நிலையத்துக்காக பரந்தூரை பரிந்துரைத்ததே, உங்கள் அரசுதான் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தபோது கூறினார். அதற்கும் உங்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்தச் சூழ்நிலையில் பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த ஜூன் 25-ம் தேதி அன்று உங்களுடைய அரசுதான் அரசாணை பிறப்பித்திருக்கிறது.
விமான நிலையத்தை ஏற்கமாட்டோம் என்று வருடக் கணக்கில் போராடுகிற மக்களுக்கான நிலங்களையும் சேர்த்தே கையகப்படுத்த அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய தமிழக அரசு அவர்களுடைய கண்களில் குத்துவதாகவே உள்ளது இந்த அரசாணை. இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா? உங்களது ஒப்புதல் உடன்தான் நடக்கிறதா என்பது தெரியவில்லை. அதற்கான பதிலும் தெரியவில்லை.
பரந்தூர் மக்களை இதுவரை நீங்கள் ஏன் சந்திக்கவில்லை என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை. பரந்தூர் போராட்டக் குழுவினரை நான் அண்மையில் சந்தித்தேன். அவர்கள் கூறுவதையெல்லாம் கேட்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. இப்பவும் ஒன்றும் குறையவில்லை சி.எம். சார். சாதி, மதம் கடந்து தங்களுடைய குடியிருப்புகளை, விவசாய பூமியை, வாழ்வாதாரத்தை, நீர்நிலைகளை, காப்பாற்ற ஒன்றாக நின்று போராடிக்கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை தயவுசெய்து நீங்கள் நேரில் சந்தித்துப் பேசுங்கள்.
உங்களுடைய அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்தித்துப் பேசக்கூடாது. முதல்வரே நேரில் சந்தித்துப் பேச வேண்டும். அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் நீங்கள் செய்யாமல், கடந்துபோக வேண்டும் என்று நினைத்தால், பரந்தூர் பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் நானே அழைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து, முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழலை நீங்கள் உருவாக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். அதையும் மீறி அப்படியொரு சூழல் வந்தால் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
நாங்கள் எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. விமான நிலையத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம்தான் தவறு என்று கூறுகிறோம். இதை நாங்கள் மட்டும் கூறவில்லை. விமானப் போக்குவரத்துத் துறை பாதுகாப்பு நிபுணர்கள், அந்த இடம் விமான நிலையத்துக்கு தகுதியானது இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். விமானிகள் அந்தப் பகுதியில் விமானத்தை தரையிறக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, அங்குள்ள நீர்நிலைகளை அழித்து அதற்கு மேல் விமான நிலையம், விமான ஓடுபாதை, கட்டிடங்கள் இதெல்லாம் வந்தபிறகு, மழைக்காலத்திலோ, வெள்ளத்தின்போதோ ஒட்டுமொத்த செனனை மாநகரமும் வெள்ளத்தில் மூழ்கும், இதையும் அதில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்,” என்று விஜய் பேசினார்.
பரந்தூர் மக்கள், உட்பட விவசாயிகளின் நலன் மற்றும் உரிமைக்காக தவெக என்றும் துணை நிற்கும்; தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு கண்டனம் உட்பட தவெக செயற்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்: பாஜக, திமுகவுக்கு கண்டனம் முதல் ‘ஜாக்டோ ஜியோ’ ஆதரவு வரை: தவெக செயற்குழுவின் 20 தீர்மானங்கள்