மதுரை: ‘விளையாட்டுப் போட்டிகளுக்குச் செல்லும் மாணவிகள், பெண்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம் நிறைவேற்றப்படும்’ என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி, விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பயிற்சி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடியானது.
நீதிபதி பரிந்துரை: இருப்பினும் அந்த வழக்கில், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பள்ளி மாணவிகள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதிடும்போது, “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவியர், பெண்கள் நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை பள்ளிக் கல்வித் துறையும், விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் பின்பற்ற வேண்டும் என அர சாணை பிறப்பித்துள்ளது.
தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து காவல் துறை, கல்வித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் செயலர்கள் விரிவாக ஆய்வு நடத்தி, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்” என்றார்.
தமிழக அரசுக்கு பாராட்டு: இதையடுத்து நீதிபதி, “நாட்டில் முதன்முறையாக, தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவிகள், பெண்கள் நலன் கருதி இதுபோன்ற சட்டம் கொண்டுவர முயற்சித்த தமிழக அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.