சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை தரமணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில், ஏழை மக்களை பாதிக்கும் வகையில் அத்திவாசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் முன்னிலையில் சென்னை தரமணியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிய அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இதை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து, எனது அறிவுறுத்தலின்படி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில் சென்னை, தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கைது செய்துள்ள திமுக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
காவல்துறையிடம் உரிய அனுமதியைப் பெற்று, மேடை அமைத்த பிறகு, இடத்தை காவல்துறை மாற்றச் சொன்னது. அதற்கும் ஒப்புக்கொண்டு இடத்தை மாற்றி அதிமுக நடத்திய மக்களுக்கான ஒரு போராட்டத்தை அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்? எதிர்க்கட்சிகளோ, மக்கள் அமைப்புகளோ போராடவே கூடாது என முழுவதுமாக ஒடுக்கும் ஒரு அரசை பாசிச அரசு என்று சொல்லாமல், வேறென்ன சொல்வது?
வெற்று விளம்பரங்களாலும், எதிர்க்குரல்களை ஒடுக்குவதாலும் தங்கள் ஆட்சி மீதான மாய பிம்பத்தை தக்க வைக்க திமுக நினைத்தால், அந்த எண்ணம் கானல் நீராய்ப் போவதை 2026 தேர்தல் காட்டும். மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரல். அதை ஒடுக்கும் ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள். இது உறுதி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.