புதுடெல்லி: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் “தமிழ்நாட்டின் கரூரில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோயுள்ளன. அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக என் இதயம் துடிக்கிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளை வழங்கவும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Deeply saddened by the tragic incident at a political rally in Karur, Tamil Nadu, that has taken so many precious lives. My heart goes out to their loved ones, and I wish a swift recovery to all those injured.
I urge Congress workers and leaders to extend every possible support…
— Rahul Gandhi (@RahulGandhi) September 27, 2025