சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். அதேபோல், விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நமது சாதனையை நாம் தான் முறியடிக்க வேண்டும் என்பதற்கேற்ப 9.69% என்று இந்தியாவிலேயே முதலிடத்திலிருந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 11.19% என புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது நமது திராவிட மாடல் அரசு.
“எல்லார்க்கும் எல்லாம்” என்ற தத்துவத்தோடு அனைத்து துறைகளிலும் தொலைநோக்கு பார்வையுடன் கவனம் செலுத்தி, அதனைத் திறம்படச் செயல்பட வைத்த நமது முதல்வர் ஸ்டாலினால் தான் இருமுறை இந்த சாதனை நமக்கு சாத்தியமாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சதவிகிதத்தை இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் தான் எட்டியுள்ளது என்ற சாதனை முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத்திறனுக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்
மேலும் முதல்வர் தெரிவித்துள்ளது போல், விரைவில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்டி சாதனை படைக்கும் என்பது உறுதி. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.