விருதுநகர்: விருதுநகர் அருகேயுள்ள கோவில்வீரார்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார். தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களது மகன் அரவிந்த் (7), அப்பகுதியில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்புப் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அய்யனார், தேவிகா, அரவிந்த் மற்றும் தேவிகாவின் அண்ணன் மகன் ஆனந்தகுமார் ஆகியோர் பைக்கில் மலைப்பட்டி பெருமாள் கோயிலுக்குச் சென்றனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். அய்யனார் பைக்கை ஓட்டினார்.
கோவில்வீரார்பட்டி அருகேயுள்ள காட்டாற்று ஓடை தரைப் பாலத்தில் அதிக அளவில் வெள்ளம் சென்றது. அதைப் பொருட்படுத்தாமல் அய்யனார் பைக்கில் கடக்க முயன்றார். அப்போது, 4 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அய்யனார், தேவிகா, ஆனந்த்குமார் ஆகியோர் நீரிலிருந்து தப்பி வந்தனர். ஆனால், சிறுவன் அரவிந்த் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.