விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் இன்று (புதன்கிழமை) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
காரியாபட்டி அருகே உள்ள வடகரையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல் இன்று காலை பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கல்குறிச்சியை சேர்ந்த சவுடம்மாள் (53), கண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் முருகன் (45), பிச்சையம்மாள் (43), கணேசன் (43) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.,