சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 மூதாட்டிகள் உள்பட 3 பேர் இன்று உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் பொன்னுபாண்டியன். இவர் வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (18), விஜய கரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (55) என்பவர் பலத்த தீக்காயம் அடைந்தார். வெடி விபத்து ஏற்பட்டதும் அருகிலிருந்தவர்கள் சிதறி ஓடினர். தகவலறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், காயமடைந்த மாரியம்மாள் 100% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைபெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிந்து, வீட்டின் உரிமையாளர் பொன்னுப்பாண்டியனை போலீஸார் தேடி வருகின்றனர்.