சென்னை: நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால்தான் மாசு ஏற்படுமா, கழிவு நீர், ரசாயனக் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பது மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரியவில்லையா, என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி வந்தால்தான் தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று இருப்பது வெளியில் தெரிகிறது. பொங்கலின்போது புகையில்லாத பண்டிகை என விளம்பரம் செய்வது போல, பக்ரீத்தின்போது ரத்தமில்லாத பண்டிகை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பேசுவதில்லை.
வீடுகளில், பொது இடங்களில் ஆடு மாடுகளை பலியிடுவது நுண்ணுயிர் தொற்று உருவாக வாய்ப்பு உண்டு என்பதை என்றாவது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முணுமுணுத்தது உண்டா, கிறிஸ்துமஸின்போது மெழுகுவர்த்தி ஏற்றுவதால் அதன் புகை புற்றுநோயை உருவாக்கும் தன்மை உடையது, எனவே அதனை தவிருங்கள் என விளம்பரப்படுத்தியது உண்டா?
இன்று சிறு கிராமங்களில்கூட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பயன்படுத்தும் நிலை இருப்பதை பார்க்கிறோம். காரணம் நீர் நிலைகள் அதிலும் ஆற்று நீரில், கழிவுநீர், ரசாயனக் கழிவுகள் நேரடியாக ஆண்டு முழுவதும் கலக்கிறது. அதுபோல, பல ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைகளில் ஆபத்தான ரசாயனக் கழிவுகளை பல நூறு லாரிகளில் கொட்டிய செய்தி ஊடகங்களில் வந்தபோதும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஆண்டுக்கு ஒருசில நாட்களுக்கு மட்டுமே நடக்கும் மக்கள் விழாவுக்கு தமிழக அரசும்,தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிவிப்புகளை வெளியிடும்அதே பார்வையில், நீர்நிலைகளில் ஆண்டு முழுவதும் மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.