திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இ-மெயில் மூலம் இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திருப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘நம்ம சாமி, நம்ம கோயில், நாமே காப்போம்’ எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 லட்சம் வீடுகளில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கு இன்னும் அதிகமாகும்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, இந்து முன்னணி சார்பில் இ-மெயில் அனுப்பி உள்ளோம். ரம்ஜானுக்கு கஞ்சி தயாரிக்க பல ஆயிரம் டன் அரிசி வழங்கும் அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவை அனைத்து வீடுகளிலும் இந்துக்கள் கொண்டாடும் வகையில் அரை அடி அளவில் விநாயகர் சிலைகள் வழங்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாடு சுதந்திரம் அடைய காரணமே விநாயகர் சதுர்த்தி தான். தமிழகத்தில் இந்துக்களை ஒன்றிணைக்கவே விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுகிறது.
ரசாயனம் கலந்து செய்யப்படும் விநாயகர் சிலைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், மேட்டுப்பாளையத்தில் நடிகர் ரஞ்சித்தும், கோவையில் அண்ணாமலையும், மதுரையில் எல்.முருகனும் பங்கேற்கின்றனர் என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.