சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகளை, சென்னை காவல் துறை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து அமைப்புகள் சார்பில், அன்றைய தினம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்பட உள்ளன. பின்னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் காவல் கூடுதல் ஆணையர்கள் கண்ணன் (தெற்கு), பிரவேஷ்குமார் (வடக்கு), கார்த்திகேயன் (போக்குவரத்து) உள்ளிட்டோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, இந்து அனுமன் சேனா, பாஜக, பாரத் இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த சுமார் 150 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வில், விநாயகர் சிலைகள் நிறுவுமிடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ் சாலைத்துறை அல்லது அரசுத் துறையிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
தீயணைப்புத் துறை, மின்வாரியம் ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. பிற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.