சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றுவதில் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பி.தாமஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2023 ஏப்ரல் முதல் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும் அதை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனக்கூறி சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட்டது.
அதையடுத்து இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிமன்றத்தில் ஆஜரான மாநகராட்சி அதிகாரிகள், விருகம்பாக்கம்பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டிருந்த சூசன் ஜான் என்பவருக்குச் சொந்தமான கட்டிடம் கடந்தமாதம் பூட்டி சீல் வைக்கப்பட்டதாகவும், தாமத நடவடிக்கைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தனர்.
அதையடுத்து நீதிபதிகள், செய்த தவறுக்காக அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆனால் அதேநேரம் விதிகளை மீறுவோருக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படக்கூடாது. இந்த வழக்கில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு சீல் வைத்துவிட்டதால் மேற்கொண்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை. எதிர்காலத்தில் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என எச்சரித்து வழக்கை முடித்து வைத்தார்.