கரூர்: விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் சொல்கின்றனர். அரசியல் கட்சிகள் இது போன்ற கூட்டங்கள் நடத்தினால் குடிநீர், உணவு, நிழல் அமையப்பெற்ற இடம் ஆகியவற்றை திட்டமிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறிய அன்புமணி ராமதாஸ், “கரூரில் நேற்று விஜய்யின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இந்த செய்தி தந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை.
காவல் துறை சரியாக திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். கடந்த வாரம் விஜய்யின் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் வந்தது என காவல்துறைக்கு தெரியும். விடுமுறை நாட்கள் என்பதால், இம்முறை அதிகம் கூட்டம் வரும் என்றும் தெரியும். எனவே, பெரிய இடத்தில் அல்லது மைதானத்தில் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளும் இதில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் சொல்கின்றனர். அரசியல் கட்சிகள் இது போன்ற கூட்டங்கள் நடத்தினால் குடிநீர், உணவு, நிழல் அமையப்பெற்ற இடம் ஆகியவற்றை திட்டமிட வேண்டும்.
பொதுமக்களும் இதில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் இருக்கைகள் கிடையாது. எனவே குழந்தைகள், பெண்கள் வரக்கூடாது. இதையெல்லாம் வரும் காலத்தில் திட்டமிட வேண்டும். திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தியதாகவும் வதந்திகள் பரவுகின்றன. இதுகுறித்து ஆணையம் விசாரணை விசாரிக்க வேண்டும். நான் யாரையும் குறைசொல்லவில்லை. அரசும் பாரபட்சம் பார்க்காமல் நடந்துகொள்ள வேண்டும். திருச்சியில் நேற்று முன் தினம் நடைபயணம் சென்றபோது யாரோ சிலர் வேண்டுமென்றே மின் தடை ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் சினிமா கலாச்சாரம் உள்ளது. ஒரு நகைக்கடை திறக்க சீரியல் நடிகர்கள் வந்தால் கூட 10 ஆயிரம், 20 ஆயிரம் மக்கள் கூடுகிறார்கள். இதுகுறித்து சிந்தித்து அனைவரும் மாறவேண்டும். அனைவரும் இதில் விழிப்பாக இருக்க வேண்டும்” என்றார்