தூத்துக்குடி: கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்செந்தூர் அமலி நகருக்கு நேற்று வந்த அவர், அங்கிருந்து மீனவர்களின் படகில் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் பாதுகாப்பது தொடர்பாக தூத்துக்குடியில் நவ.15-ல் ‘கடல் அம்மா மாநாடு’ நடத்துகிறோம். இந்த மாநாட்டுக்கான ஆலோசனை பயணம்தான் இது.
கரூர் சம்பவத்தின்போது தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு இருந்தது. ஆனால், மக்களுக்குத்தான் பாதுகாப்பில்லை. கரூர் சம்பவம் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து கருத்து கூற முடியாது. விஜய்யை காப்பாற்ற வேண்டுமென பாஜக நிலைப்பாடு எடுத்துள்ளது. விஜய்யை பார்க்க வந்த கூட்டத்தால்தான் நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, நடந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, விஜய்வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து அரசு, காவல் துறை மீது பழிபோட்டு, தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவதால்தான் சிக்கல் ஏற்படுகிறது.
ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்துவது உயிரிழப்பைவிட கொடுமையாக உள்ளது. விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. அதேகூட்டணியில் உள்ளதால் அதிமுகவும் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.