சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயிரிழப்பு நேரிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த வாதம்: தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, ‘ரோடு ஷோ’ செல்ல எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா: கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கோரியுள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது.
நீதிபதி செந்தில்குமார்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான காணொளிகள் வேதனை அளிக்கின்றன. இந்த வழக்கில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தையும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக காணொளிகள் வெளியாகியுள்ளன. அந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? வழக்கு பதிவு செய்வதற்கு என்ன தடை? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும். வழக்கு பதிவு செய்து, விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.
அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிரச்சாரத்துக்காக தவெக கேட்ட இடத்தைதான் ஒதுக்கினோம். 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில் இரு நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. மற்ற அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டன. அதே இடத்தில்தான் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். தவெக நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் 559 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு மீது குறை கூறுவது எளிது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கரூரில் நடந்துள்ள சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு. நீதிமன்றம் இதை கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. பொறுப்பை யாரும் தட்டிக்கழிக்க முடியாது. பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கட்சித் தொண்டர்களையும், ரசிகர்களையும் பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளனர். அவர்களுக்கு தலைமைப் பண்பு இல்லை. சம்பவத்துக்கு பொறுப்பேற்காதது கண்டனத்துக்குரியது. இவ்வாறு கூறி வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.
முன்னதாக, கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை அவசர வழக்காக விசாரிக்குமாறு, அவரது தரப்பில் நீதிபதிகள் வேல்முருகன், அருள்முருகன் அமர்வில் முறையிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை அணுகுமாறு மனுதாரரை அறிவுறுத்தினர்.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை: இதற்கிடையே, தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கும் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் தள பதிவுகளும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை காத்திருக்கிறதா? புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு வசம் கரூர் போலீஸார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.