மதுரை: “எனக்கு எந்த ஒரு கட்சி பின்புலமும் இல்லை. பிறருக்கு இதுபோன்று நடக்கக் கூடாது என புகார் அளித்தேன்” என தவெக மாநாட்டில் பவுன்சர்களால் தாக்கப்பட்ட சரத்குமார், மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூறினார்.
மதுரை பாரப்பத்தியில் கடந்த வாரம் நடந்த தவெக மாநாட்டில் பவுன்சர்களால் கீழே தள்ளி தாக்கப்பட்டதாக பெரம்பலூரை சேர்ந்த சரத்குமார் கொடுத்த புகாரின்பேரில் தவெக தலைவர் விஜய், அவரது 10 பவுன்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது. இதற்கிடையில், மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்த சரத்குமார், அவரிடமும் புகார் கடிதம் ஒன்றை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தவெக தரப்பில் என் மீது புகார் அளித்தாலும் நான் சந்திக்கத் தயாராக உள்ளேன். எனக்கு எந்த ஒரு கட்சி பின்புலமும் கிடையாது. இனிமேல் பிறருக்கு இதுபோன்று நடக்கக்கூடாது என்றே புகார் அளித்தேன்.
இந்தப் புகாரை வாபஸ் பெறக் கோரி தெரியாத நபர்களிடம் இருந்து அழுத்தம் கொடுத்து அழைப்புகள் வருகின்றன. மாநாட்டில் பங்கேற்ற நான் அரியலூரில் இருந்து அந்தோத்ய ரயிலில் மதுரைக்கு வந்தேன். என்னைப்போன்று ஒருவர் ‘நான்தான் அந்த இளைஞர்’ என வீடியோ பரப்புகிறார்” என்றார்.