மதுரை: விஜய் கட்சியின் மதுரை மாநாட்டில் தொண்டர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் போதிய ஆதாரங்களை சமர்பிக்க புகார்தாரருக்கு போலீஸ் அறிவுறுத்தி உள்ளது.
மதுரை – தூத்துக்குடி ரோட்டில் கூடக்கோவில் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆக.21-ல் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் கூடினர்.
மாநாட்டு மேடையில் தோன்றிய விஜய் மேடைக்கு முன்பாக அமைத்திருந்த ‘ரேம்ப் வாக்’கில் நடந்து சென்றார். அப்போது, பாதுகாப்பு கட்டுப்பாட்டை மீறி சிலர் ‘ரேம்ப் வாக்’ மேடையில் ஏறி விஜய்க்கு கை கொடுத்தனர்.
விஜய்யின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தும் நோக்கில், தொண்டர் ஒருவரை பவுன்சர்கள் தூக்கி வீசிய காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அக்கட்சியின் தொண்டரான பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் சரத்குமாரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதாகவும், இதில் நெஞ்சு வலித்து மருத்துவமனைக்கு சென்றதாகவும் அவர் தனது தாயாருடன் சென்று பெரம்பலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் குன்னம் போலீஸார் தவெக தலைவர் விஜய், 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடம் மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலைய பகுதி என்பதால் கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர்.
தவெக தலைவர் விஜய் உட்பட அவரது பவுன்சர்கள் 10 பேர் மீதும் 3 பிரிவுகளில் கூடக்கோவில் காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் சரத்குமார் அல்ல. மாநாட்டு ரேம்ப் வாக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் வேலூரைச் சேர்ந்த ஒரு தொண்டர் என்றும் சில தகவல்கள் பரவின.
இதனால், சரத்குமார் தாயாரை மதுரை எஸ்.பி அரவிந்த் நேரில் அழைத்து விசாரித்தார். மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திலும் சரத்குமார் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் ஆய்வாளர் சாந்தி விசாரித்த நிலையில், பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டவர் சரத்குமாரே என்பதற்கு போதிய ஆதாரங்களை சமர்பிக்க அறிவுறுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸார் கூறுகையில், ‘பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சரத்குமாரிடம் நேரில் விசாரித்தோம். மேடையில் தூக்கி வீசப்பட்டவர் வேலூரைச் சேர்ந்த தொண்டர் அஜித்குமார் என்ற தகவலும் பரவுவதால் இருவரின் உருவ ஒற்றுமை விவரம் சேகரிக்கிறோம். மேலும், ரேம்ப் வாக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் சரத்குமார் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அவரிடமும் சில வீடியோ, போட்டோ, மதுரைக்கு பயணித்தது போன்ற ஆதாரங்களை சமர்பிக்க அறிவுறுத்தி உள்ளோம். இதன் பின், சம்மன் அனுப்பி பவுன்சர்களிடம் விசாரிக்கப்படும்’ என்றனர்.