கரூர்: கரூரில் நேற்று விஜய் உரையாற்றியபோது மின் தடை செய்யப்பட்டது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்கள், போகஸ் லைட்டுகள்தான் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆனது என மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விஜய் பேச ஆரம்பித்தபோது மின் தடை செய்யப்பட்டது என சிலர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி, “ தவெக தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தபோது தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. அவரின் பிரச்சாரத்தின்போது வெளியான அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களில் தெருவிளக்குகள், கடைகளில் வெளிச்சம் இருப்பது தெளிவாக தெரிகிறது.
எனவே, விஜய் உரையாற்றியபோது மின் தடை செய்யப்பட்டது என்பது திட்டவட்டமாக மறுக்கப்படுகிறது. மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களால் பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்கள், போகஸ் லைட்டுகள் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆனது.
முன்னதாக, கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் செப்.27 அன்று காலை 12 மணிக்கு மேல் விஜய் உரையாற்ற உள்ளார் என்பதாலும், வேலுசாமிபுரத்தில் கூட்டம் அதிகம் வரும் என்பதாலும், விஜய் பேசும்போது குறிப்பிட்ட நேரம் மின்சாரத்தை நிறுத்தம் செய்து தரவேண்டும் என செப்.26 அன்று கடிதம் கொடுத்தனர். அவரது கோரிக்கையை அன்றே மறுத்தோம்.
விஜய் வருவதற்கு முன்பு மரத்தின் மீதும், டிரான்ஸ்பர் மீதும் சிலர் ஏறியதால், போலீசாரின் அறிவுறுத்தலின்படி மின்சாரம் சற்று நேரம் துண்டிக்கப்பட்டு, அவர்களை மரத்தின் மீதிருந்தும், டிரான்ஸ்பார்மர் மீதிருந்தும் அப்புறப்படுத்தி உடனே மின்சாரம் வழங்கினோம். ஆனால், விஜய் வரும்போது மின் தடை செய்யவில்லை” என்றார்.