முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை இரண்டு வாய்ப்புகளை மட்டுமே யோசித்து வைத்திருந்தார். அதாவது, இபிஎஸ் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அதிமுகவில் இணைவது அல்லது தனிக்கட்சி தொடங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் பயணிப்பது ஆகிய இரண்டும்தான். இப்போது மூன்றாவது வாய்ப்பாக விஜய் கூட்டணி ஆப்ஷனையும் திறந்துள்ளார் ஓபிஎஸ்.
2021 முதல் பல்வேறு பிரளயங்களை சந்தித்து இப்போது கடைசி கட்டத்தில் வந்து நிற்கிறார் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்து ஒரங்கட்டப்பட்டது முதல், கட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாஜக முழுமையாக கைவிட்டது வரை தொடர்ந்து இறங்குமுகத்தையே சந்தித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.
பாஜக அணியில் பலத்த நம்பிக்கையோடு இருந்த பன்னீர்செல்வம், இபிஎஸ் கூட்டணிக்குள் வந்தது முதலே ஒட்டியும், ஒட்டாமலும் பேசி வருகிறார். ஒருபக்கம் சசிகலா, தினகரனோடு சேர்ந்து தென்மாவட்டங்களை வசப்படுத்துவேன் என மிரட்டியும் பார்த்தார். மற்றொரு பக்கம், வழக்கு மேல் வழக்கு போட்டு அலைகழித்தும் பார்த்தார். கடைசியாக ‘எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்’ என பணிந்தும் பார்த்துவிட்டார். ஆனால், எதற்கும் மசியாமல், ‘ஓபிஎஸ் உடன் ஒட்டும் வேணாம், உறவும் வேணாம்’ என்ற பிடிவாதத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி மதுரையில் தனது அணியின் சார்பில் மிகப் பிரமாண்டமான மாநாடு நடத்தவுள்ளதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதில் தென் மாவட்ட தொண்டர்களை திரட்டி பலத்தை காண்பிக்கவும் தயாராகி வருகிறார். தினகரன், சசிகலாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாநாடு மீது இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஓபிஎஸ்சின் சமீபத்திய பேட்டியில் சில முக்கிய விஷயங்களை சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அவரின் பேச்சின் மூலமாக, தனது கைவசம் 3 ப்ளான்களை வைத்துள்ளதை பார்க்க முடிகிறது. முதல் ஆப்ஷன், சட்டப் போரட்டமோ அல்லது பாஜக பஞ்சாயத்து மூலமோ அதிமுகவில் ஐக்கியமாவது. ஆனால், இதற்கு இப்போதுவரை பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார் இபிஎஸ். எனவே, அவரை வழிக்கு கொண்டுவர சில பிரம்மாஸ்திரங்களை ஏவ முடிவெடுத்துள்ளார் ஓபிஎஸ். இருப்பினும், அதற்கு பாஜக கைகொடுக்குமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
அடுத்ததாக, தனிக்கட்சி தொடங்கி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து அதிமுகவோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பது. இதற்கு பெரும்பாலும் இபிஎஸ் மறுப்பு சொல்லமாட்டார் என்றே சொல்லப்படுகிறது. ஆனால், தனிக்கட்சி தொடங்குவதில் ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லை. சமீபத்திய பேட்டியில் கூட ‘அதிமுக எங்கள் உயிர்நாடி இயக்கம்’ என்று ஓபிஎஸ் சொன்னதிலிருந்தே இதனை புரிந்துக் கொள்ளலாம்.
இது இரண்டையும் விட முக்கியமாக, இப்போது விஜய் ஆப்ஷனை கையில் எடுத்திருக்கிறார் ஓபிஎஸ். அவர் தனது பேட்டியில், “கட்சி தொடங்கியதில் இருந்து இப்போதுவரை விஜய் நன்றாகவே செயல்படுகிறார். அவரின் முடிவுகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் எங்களின் தார்மிக ஆதரவு அவருக்கு உண்டு” என்று தெரிவித்துள்ளார். அதேபோல ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் விஜயுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, முதல் இரு ஆப்ஷன்களும் கைகூடாத பட்சத்தில், தனிக்கட்சி தொடங்கி விஜய்யின் தவெக கூட்டணியில் போட்டியிடவும் திட்டமிட்டு வருகின்றனர்.
விஜய்க்கு வட மாவட்டங்களைப் போலவே சில தென் மாவட்டங்களிலும் கணிசமான செல்வாக்கு உண்டு. அதேபோல ஓபிஎஸ்ஸுக்கும் தென்மாவட்டங்களில் பலம் அதிகம். இதனை பயன்படுத்தி, அதிமுக கூட்டணிக்கு பயம் காட்டவும் திட்டம் போடுகிறார் பன்னீர்செல்வம்.
விஜய்யால் இனி திமுக கூட்டணி கட்சிகளை இழுக்க முடியாது. அதிமுக – பாஜக அணியில் இருக்கும் சில கட்சிகளும் இவர்கள் பின்னால் வருவது கடினம். எனவே, ஓபிஎஸ்ஸை கூட்டணிக்குள் கொண்டுவந்தால், அதனையே முன்னிறுத்தி தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளை உள்ளே கொண்டுவர திட்டம் போடுகிறது தவெக.
ஒருவேளை அதிமுக, பாஜக கைவிட்டால் நமது பலத்தை காட்ட தவெகதான் சரியான தேர்வு என்று ஓபிஎஸ்ஸிடம் உள்ள தலைவர்கள் சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனராம். இதனால்தான் இப்போது விஜய் குறித்து ஓபிஎஸ் பாசிட்டிவாக பேச ஆரம்பித்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
விஜய் பக்கம் ஓபிஎஸ் செல்வாரா என்ற பேச்சு இப்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்க ஆரம்பித்துள்ளது. ஒருவேளை இந்தக் கூட்டணி உருவானால், அது அதிமுக – பாஜக அணிக்கு சவாலாக இருக்கும் என்றும் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.