அரியலூர்: விஜய் தலைமையில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
அரியலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கும்போது, நாங்கள் எப்படி அந்த கூட்டணியில் இருக்க முடியும்? முதல்வர் வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் திரண்டிருந்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. பெரம்பலூருக்கு விஜய் சென்றபோது நள்ளிரவாகிவிட்டதால், அவர் அங்கு பிரச்சாரம் செய்யவில்லை. தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி உருவாகும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது.
விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் ஒரு கூட்டணியும் நிச்சயம் அமையும். தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு. இவ்வாறு டிடிவி.தினகரன் தெரிவித்தார்.