சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோவில் சுயமாக சிந்தித்து பேசியதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். அவர் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “செந்தில் பாலாஜி மட்டுமே குற்றவாளி என்று விஜய் சொல்ல விரும்புகிறாரா? அவர் என்ன வகையான குற்றங்களை செய்தார் என சொல்கிறார். ‘ஆட்களை அனுப்பினாரா? கல் எறிந்தாரா? அதனால் தடியடி நடத்தப்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதா?’ இதெல்லாம் அரசியல் நேர்மையற்ற குற்றச்சாட்டு. இது கூட்ட நெரிசல் உயிரிழப்புகள்தான்.
ஒரு சதுர மீட்டரில் 4 அல்லது 5 பேர்தான் நிற்க முடியும். அங்கே 10 முதல் 15 பேர் நின்றிருக்கிறார்கள். 10 மணி நேரம் காத்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இது 100 சதவீதம் கண்கண்ட உண்மை. அதனை மறைத்து சதி என்று சொல்வதும், திமுக அரசு மீது பழி போடுவதும் ஆபத்தான அரசியல். அவருக்கே இது நல்லதல்ல.
விஜய் இதனை சுயமாக சிந்தித்து சொன்னதாக தெரியவில்லை. அவரை சுற்றிலும் உள்ளவர்கள் உசுப்பேற்றி இதுபோல பேச சொல்லியுள்ளனர். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல் திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போதுதான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும்.
பாஜக தரப்பிலிருந்து ஒரு குழு வந்துள்ளது. அதற்கான தேவை என்ன? விஜய் மீது தவறு இல்லை, அரசு மீதுதான் தவறு என உடனடியாக அண்ணாமலை பேசுகிறார். இது அவர்களுக்கே எதிராக முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் எல்லாம் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், வழிவிட்டு நிற்பார்கள். ஆம்புலன்ஸ்கள் நோயாளியை அழைக்க செல்லும்போது ஆள் இல்லாமல்தான் போகும். பின்னர் நோயாளியை ஏற்றி ஆளோடு செல்வார்கள். இதெல்லாம் என்ன பேச்சு. இது நாகரீகமான அரசியலா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.