தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு 2024 அக்டோபர் 27-ல் விக்கிரவாண்டியில் நடந்தது. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21-ல் நடந்தது. அதன்பின், செப்டம்பர் 13-ல் திருச்சியில் தனது தமிழக சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் விஜய். டிசம்பர் 20 வரை 38 மாவட்டங்களிலும் அவர் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தனது சுற்றுப் பயண தொடக்கம் பற்றிய விமர்சனங்கள் வலுத்த நிலையில், “யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம்” என்று விஜய் கூறியுள்ளார்.
விஜய் அரசியலின் மூன்று நிகழ்ச்சிகளுமே தமிழகத்தின் இரு பெரும் திராவிட இயக்கங்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன. குறிப்பாக, திருச்சியில் விஜய்க்கு கூடிய கூட்டம் திமுக, அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் ‘காலூன்றி, வேரூன்றி’ என்று பேசிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கும் சிக்கல்தான் என்ற பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன.
மறுபுறம், “விஜய்க்கு இன்னும் அரசியலே முழுமையாகத் தெரியவில்லை. அத்தகைய தலைவரை பின்தொடரும் கொள்கைத் தெளிவும், பிடிப்பும், பிணைப்பும் இல்லாதவர்கள் கூடும் கூட்டங்களால் திமுக, அதிமுக போன்ற அரசியல் ஜாம்பவான்களை அசைத்துக் கூட பார்க்க முடியாது” என்று கருத்துகளும் எதிர்வினையாக அடுக்கப்படுகின்றன.
வரிந்து கட்டி விமர்சனம்… – விஜய்யின் திருச்சி பிரச்சாரம் குறித்து திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்துள்ள கருத்துகளை அலசுவது, அதன் பின்னால் இருக்கும் ‘ஃபியர் ஃபேக்டரை’ டீகோட் செய்ய உதவும் என்று சொல்லலாம்.
அவ்வாறு அலசி ஆராய்கையில், அதிக கவனம் பெறுபவர் என்னவோ ஆளும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்தான். திருச்சியில் விஜய் இறங்கிய சில நிமிடங்களில் பறந்த அறிக்கையில், “கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக” என்று சிலேடையாக தவெக தொண்டர்களை தாக்கியிருந்தார். அவருக்கு பக்கவாத்தியம் வாசிப்பதுபோல் அமைச்சர் அன்பில் மகேஸும் “விஜய் நிகழ்ச்சிக்கு திட்டமிடல் போதாது. சொல்லவந்த கருத்துகளை மக்களுக்கு கொண்டு செல்லும் அளவுக்குக் கூட முன்னேற்பாடுகளை செய்யத் தெரியவில்லை” என்று கூறியிருந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, “கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது” என்றார். இன்னொரு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, “அரசியலுக்குப் புதிதாக வருபவர்கள் எம்ஜிஆரின் செல்வாக்கை திருடப் பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
விஜய் அரசியல் வருகை தொட்டே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் மிக முக்கியக் கருத்து, “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஆனால் அரசியலுக்கு வந்தவுடனேயே ஆட்சிக்கு வர முடியாது” என்பதாகத்தான் இருக்கிறது. இதுவரை விஜய்யின் பெயரை வெளிப்படையாக இபிஎஸ் சொல்லி விமர்சிக்காவிட்டாலும், அடிக்கடி பதிலடி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்.
திருச்சியில் விஜய் பேசிய பின்னர் ஊடகங்கள் பலவும் எதுகை மோனையாக ‘திருச்சி திணறியது’ என்று கேப்ஷனிட, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமானோ, “நடிகர் அஜித், நடிகை நயன்தாரா வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். கூட்டத்தை பார்க்காமல் கொள்கையை பார்க்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
வெறும் விமர்சனங்கள் என்பதைத் தாண்டி, இந்த எதிர்வினைகளில் கூட்டம் பற்றிய பயம் இருப்பது வெளிப்படையாகவே தெரியத்தான் செய்கிறது. இதைத்தான் விஜய்யும், “மக்களிடையே செல்வாக்கை இழந்த ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ, இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
கவனிக்கப்பட வேண்டிய பார்வை: விஜய் மீது விமர்சனங்களை அள்ளித் தெளிப்போர் மத்தியில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, ‘தமிழகத்தில் இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்தக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடுதான் விஜய் நிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டம். தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் விஜய் இருப்பதை வெளிக்காட்டுகிறது. கூட்டணி ஆட்சி என்கிற விஜய்யின் கருத்தை வரவேற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரைப் போலவே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ‘தவெக தலைவர் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும்’ என்று சற்றே விஜய் பக்கம் சாய்ந்துள்ளார். அவர்களின் இந்தப் பார்வையும், சார்பும் கவனிக்கப்பட வேண்டியவை. இதில் லேட்டஸ்டாக, “தவெகவுக்கு ஒரு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளதும் முக்கியமானது.
‘இன்னும் கூட்டணி பேரங்கள் எல்லாம் ஆரம்பிக்காத நிலையிலேயே விஜய்யின் பக்கம் தேர்தல் களங்கள் பல கண்ட இரண்டு கட்சிகள் ஆதரவாகப் பேசக் காரணம் விஜய்க்கான கூட்டம்தான். ஓர் அரசியல் கட்சியின் பலமே கூட்டம்தான். ஆரம்பத்தில் கட்சி அபிமானிகளாக இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நாள் தொண்டர்களாக மாறுவார்கள். அப்படியான தொண்டர்கள்தான் இன்னும் திமுக, அதிமுகவை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, விஜய்க்கு கூடும் கூட்டத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது.
மேலும், ரீல்ஸ் எடுப்போரால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு அண்மையில் ஒரு போராட்டம் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி முன்னுதாரணமாக நிற்கின்றனர் நேபாள ஜென் ஸீ தலைமுறையினர். விஜய்யின் ரசிகர்களில் இந்த ஜென் ஸீ தலைமுறையினரும் பெருமளவில் இருக்கின்றனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரு மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களுக்கு விஜய் மீது நிச்சயம் ஒரு ‘சாஃப்ட் கார்னர்’ ஏற்படும் அளவுக்கு அவரது இருப்பை அரசியலில் பதிவு செய்துவிட்டார் என்றே புரிந்து கொள்ளலாம்’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதற்கேற்பவே தமிழக அரசு ஆட்சி முடியப் போகும் நேரத்தில் முன்னெடுத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று திமுக உறுப்பினர் சேர்க்கை போன்ற திட்டங்கள் திமுகவுக்கு பேக்ஃபயர் ஆகி வருகின்றன். இது அரசின் அச்சத்தின் வெளிப்பாடு என்று அதிமுகவும் விமர்சித்து வருகிறது. இந்த அச்சம் நேரடியாக வாக்காளர்கள் மீது உள்ளதுபோலவே புதிதாக களத்துக்கு வந்துள்ள தவெகவின் மீதும் இருக்கிறது. அதனாலேயே தான் கரூர் திமுக முப்பெரும் விழாவில் தொண்டர்கள் மாஸ் காட்டுவார்கள், காட்ட வேண்டும் என்று தலைமை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.
தானா சேரும் கூட்டம்; தக்க வைக்கும் விஜய் – ஆண்ட, ஆளும் கட்சிகளையும் அரும்பி வடிவம் பெற்ற கட்சிகளையும் கலங்கடிக்கச் செய்யும் விஜய்க்கான கூட்டம் தானா சேரும் கூட்டம்தான் என்று கள அரசியல் நிபுணர்கள் பலரும் ஒப்புக் கொள்கின்றனர். மாநாடுகள் மட்டுமல்லாது சுற்றுப் பயணங்களிலும் விஜய் அந்தக் கூட்டத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல.
தவெக கட்சியில் இப்போதே ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்று அவர்களிடம் இருந்து புள்ளிவிவரங்கள் உலா வருகின்றன. விஜய்யின் ரசிகர்கள் எல்லோருமே, எங்கள் ஓட்டு விஜய்க்கு தான் என்று சொல்லிவிட்டனர். இரண்டு மாநாடுகளிலும், திருச்சி சுற்றுப் பயணத்திலும் கலந்து கொண்ட வாக்களிக்கும் தகுதியுள்ள விஜய் ரசிகர்களின் வாக்குகள் நிச்சயம் மடைமாற வாய்ப்பே இல்லை என்பதை உறுதியாகக் கொள்ளலாம் என்கின்றனர் தவெகவினர். அண்மையில் சீமான் நடத்திய இரண்டு நிகழ்ச்சிகளில் கூட்டம் இல்லாதது அரசியலில் பேசுபொருள் என்றால், விஜய் எங்கு சென்றாலும் தன்னெழுச்சியாக திரளும் கூட்டமும் நிச்சயம் பேசு பொருள்தான்.
அதே வேளையில், ‘இந்தக் கூட்டத்தின் மீது சில சந்தேகங்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் என்பது தமிழக வாக்கு வங்கியில் ஒரு சிறிய துரும்புதான். அது மட்டுமே தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றுத் தந்துவிடாது. அதை மட்டுமே வைத்துக் கொண்டு கேப்பிடலைஸ் செய்யலாம் என்ற கணக்கு விஜய்க்கு மிஸ்டு பிளானாக மாறும்.
பிரம்மாணடமான கூட்டத்தை கூட்டிக் காட்டும் பிரம்மாண்ட அரசியல், திமுக இதைச் செய்யவில்லை, அதிமுக அதைச் செய்யவில்லை என்று கூறும் குற்றச்சாட்டு அரசியல், ரசிகர்களைக் கவர மாஸ் ஸ்பீச் கொடுக்கும் அபிமான அரசியல் எல்லாம் தமிழக வாக்காளர்களின் நம்பிக்கை பெறும் அரசியல் இல்லை.
விஜய் தமிழக அரசியல் பற்றி ஆழ்ந்த புரிதலோடு, தமிழக மக்களின் தற்போதைய பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு அதற்கான வாக்குறுதிகளை மனதிலிருந்து முன்வைக்கும் அரசியல்வாதியாக தன்னை கட்டமைத்துக் கொண்ட பின்னர் கோட்டை பற்றி கனவு காண முடியும், அதுவரை அவர் முன்னெடுப்பது எல்லாம் தவெக கள அரசியலை வலுவாகக் கட்டமைக்கும் முயற்சிகளாகத் தான் இருக்குமே தவிர, ஆட்சியை கையில் தருவதாக இருக்காது’ என்ற ஒரு பார்வையும் முன்வைக்கப்படுகிறது. எது எப்படியோ தமிழக அரசியலில் விஜய் நிச்சயமாக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாதது.