சென்னை: கரூர் துயரச் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதியரசர் கே.சந்துரு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், ‘இந்து’ என்.ராம் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் 270-க்கும் மேற்பட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை,இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்துக்கும் உகந்ததல்ல.
விக்கிரவாண்டி,மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது, மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர்.
விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல், தன்னைக் காண திரண்டிருந்தவர்களை 7 மணி நேரத்துக்கும் மேலாககாக்க வைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச் சான்றுகள் காட்டுகின்றன.
ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே ‘திட்டமிட்ட சதி’ இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லை எனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கியுள்ளனர். கடந்த 30-ம் தேதி விஜய் வெளியிட்ட காணொளியில், தன்னால்தான் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாமல், அரசின் மீது பழி சுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே தெரிகிறது.
எவ்வளவு கொடிய தீங்கையும் இழைத்துவிட்டுவதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும்.
வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக் கூடாதென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.