மதுரை: விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அரசியலில் இருந்து தமிழக முதல்வர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார் என, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திராஜன் விமர்சனம் செய்தார்.
முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி மறு சீரமைப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். பாஜக – அதிமுக கூட்டணி பலமாக உள்ளது. காங்கிரஸ் – திமுக – விடுதலை சிறுத்தைகள் கூட்டணியின் அங்கீகாரம் போய்விட்டது. மக்கள் நீதி மையம், கொங்கு கட்சி, ஜவாஹிருல்லா கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. எங்களைப் பார்த்து பயப்படுவதாக சொன்னார்கள்.
காங்கிரஸ் அதிகார பகிர்வு வேண்டும் என, சொல்கிறது. திருமாவளவன் ஏற்கனவே சொல்லிவிட்டார். கம்யூனிஸ்டுகள், உழைப்பாளர்கள் என சொல்லிவிட்டு தற்போது பெட்டி பாம்பாய் அடங்கிவிட்டனர். தேர்தல் நெருங்கும்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும். இண்டியா கூட்டணி உதிரும்.
தம்பி விஜய் இரண்டு மூன்று நாட்களாக பெரிய கூட்டத்தை கூட்டுகிறார். அவரிடம் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி தரும் தம்பியிடம் சரி பார்த்து எழுதிக்கொடுக்க கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் மீனவர்களை பற்றி சொல்லும்போது, பிரதமர் வந்த பிறகு 3700 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தூக்கு தண்டனையிலிருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் உயிரிழக்காமல் பாதுகாத்து இருக்கிறது பாஜக.
விஜய் வசனகர்த்தாவை மாற்றவேண்டும். 75 ஆயிரம் ரயில் பெட்டி பெரம்பூர் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயிலுக்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே பற்றி தம்பி சொல்கிறார். அவரது ஸ்கிரிப்ட் சரி பார்க்க வேண்டும். அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களைப் போல் உள்ளவர்களிடம் சரித்திரம் குறித்து கேட்டுக்கொள்ளலாம். திடீரென அரசியலுக்கு வந்தவுடன் என்னவென்று புரியாமல் உள்ளார். அவர் கூட்டத்துக்கு வருபவர்களும் அவரைப் பார்க்க வருகின்றனர். வாக்களிக்க வரவில்லை.
ஒரு விஷயத்தில் நான் விஜயுடன் உடன்படுகிறேன். முதல்வர் வெளிநாட்டுக்கு முதலீடு ஈர்க்க செல்கிறாரா, முதலீடு செய்ய செல்கிறாரா என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் திமுக எதிர்ப்பை தீவிரபடுத்த வேண்டும். திமுகவை நிச்சயம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஜிஎஸ்டியில் மக்கள் பலன் பெறப்போகிறார்கள். ஆனால் கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு ஷூட்டிங் நடத்துகின்றனர். ஒரே வித்தியாசம் என்னவென்றால் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார். அரசியலில் இருந்த முதல்வர் ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார்.
மாணிக்கம் தாகூர் குறித்து விருதுநகரில் கேளுங்கள் அவர் எந்தளவுக்கு மக்களுக்கு உதவி செய்கிறார் என்பது தெரியும்.
எனக்கு வேர்த்தால் கூட கர்சிப் தராதீர்கள் என, சொல்லிவிட்டேன். ஏனென்றால் அதைத் துடைக்க முகத்தை மறைத்தால் கூட கேமரா முன்பு முகத்தை மறைத்து விட்டதாக சொல்வார்கள் என்பதால் சொல்கிறேன். செல்வப் பெருந்தகை எங்களைப் பற்றி சொல்வதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
செல்வபெருந்தகை, திருமாவளவன் ஸ்டாலினை பார்ப்பர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அமித்ஷாவை பார்த்தால் குறை சொல்கின்றனர். கூட்டணி என இருந்தால் கட்சி தலைவர்கள் பேசத் தான் செய்வார்கள். இதில் என்ன ஆச்சரியம் உள்ளது. நானும் தம்பி விஜய பாஸ்கரும் விமான நிலையத்திற்குள் பேசினோம். அதுபோல் இரண்டு கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசுவது இயல்பு.
இதை ஏன் செயற்கையாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், எதிர் கூட்டணியை பார்த்து பயந்துள்ளனர். பிரச்சாரத்தின்போது, விஜய் முருகன் வேலை கையில் வாங்கும்போது, காலணியை கழற்றாமல் வாங்கினார். ஆரம்பகாலம் என்பதால் அவருக்கு தெரியவில்லை. மக்கள் உணர்வை அவர் புரிந்து கொள்ளவேண்டும். தொண்டர்களுக்கும் அவர் சொல்லிக் கொடுக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.