‘தம்பி… தம்பி…’ என உருகி விஜய்யை அரசியலுக்கு அழைத்துக் கொண்டிருந்த சீமான், இப்போது வெறித்தனமாக ‘அணில் குஞ்சுகள்’ என்று விமர்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறார். சீமானின் தற்போதைய விமர்சனத்தால், தவெக, நாதக இடையே கடும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
ஆகஸ்டு 21-ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தடபுடலாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இம்மாநாடு தனக்கு பெரும் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் விஜய். இந்தச் சூழலில்தான் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரிடமிருந்து விஜய் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் கட்சி தொடங்கும் வரை ‘அவர் என் தம்பி… எனக்கு எதிராகவே நின்றாலும் சரிதான்’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் சீமான். கட்சி தொடங்கும் முன்பு ‘சீமான் ரெஃபரன்ஸ்’ பலவற்றையும் உள்வாங்கினார் விஜய். ஏனென்றால், இப்போது இருக்கும் கட்சிகளில் அதிகளவில் இளைஞர்கள் உள்ள கட்சி நாதகதான். சீமானின் தம்பிகளில் 90 சதவீதம் பேர் 20 முதல் 40 வயதினர்தான்.
எனவே, இளைஞர்களை ஈர்க்க சீமான் என்னென்ன செய்கிறார் என்பதனை மிகவும் கவனமாக உற்று நோக்கியது விஜய் தரப்பு. அதன் வெளிப்பாடாகவே கட்சிக் கொடியின் நிறம், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ஸ்லோகன், தமிழ்த் தேசியம் ஆகியவற்றை தவெக-வுக்குள் கொண்டுவந்தார்கள்.
சீமானுக்கும், விஜய் அரசியலின் தொடக்கத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. விஜய் முழுவதுமாக தமிழ்த் தேசிய கொள்கைகளை வெளிப்படுத்தினால், ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என நினைத்தார். ஆனால், எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘பெரியாரை கொள்கைத் தலைவர்’ என்றும், ‘திராவிடம் – தமிழ் தேசியம் இரு கண்கள்’ என்றும் சொன்னார் விஜய். இதன் பிறகுதான், ‘ ஒண்ணு அந்தப் பக்கம் நில்லு, இல்ல இந்தப் பக்கம் நில்லு, நடுவுல நின்னு லாரியில அடிபட்டு சாகாதே’ என இறங்கி அடித்தார் சீமான்.
விஜய்யின் அரசியல் வருகை ஒரு கட்டத்தில் நாதகவுக்கு சவாலாக மாறுமோ என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால், சீமானுக்கு இப்போது வரை பலம் இளைஞர்கள், புதிய வாக்காளர்கள், மாற்றத்தை விரும்புவோர் வாக்குகள்தான். ஆனால், இந்த வாக்குகளில் இப்போது கணிசமான வாக்குகள் விஜய்க்கு செல்லும் சூழல் உள்ளது. இதில் ஆச்சரியமில்லை. ஏனென்றால், புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது, இவற்றில் கணிசமான வாக்குகள் அவர்களுக்கு செல்லும். விஜயகாந்த், கமலுக்கு முதல் தேர்தலில் ஓரளவு வாக்குகள் கிடைத்தது இப்படித்தான்.
ஆனால், சீமான் 2016 முதல் தேர்தல் அரசியலில் இருக்கிறார். தற்போது 8.22 விழுக்காடு வாக்குகளை வைத்திருக்கிறார். அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறினாலும், சீமானால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடிவதில்லை. இந்த விமர்சனம் அவர் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் விஜய்யின் வருகையால், நாதகவின் வாக்கு வங்கி ஒருவேளை குறைந்தால் அது இன்னும் விமர்சனத்தை அதிகமாக்கும்.
இந்த இக்கட்டான சூழலில்தான், விஜய்யை முழுமையாக எதிர்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் சீமான். இதுவரை ஆங்காங்கே, பட்டும் படாமலும் தவெகவை தாக்கிய சீமான், இப்போது தனது பாணியில் தடாலடியாக இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளார்.
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. திமுக, அதிமுக அணிகள் முதல் இரு இடங்களை பிடித்தால், மூன்றாவது இடத்துக்கு தவெக, நாதக இடையே கடும் போட்டி நிகழும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கடந்த தேர்தல் வரை மூன்றாம் இடத்தை நாதகவே தக்கவைத்த நிலையில், அதனை விஜய்க்கு விட்டுக் கொடுக்க கூடாது என நினைக்கிறார் சீமான். அதன் வெளிப்பாடாகவே விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார் என்றும் அவர் லாஜிக் சொல்கின்றனர்.
இன்னொரு பக்கம், கடந்த காலங்களில் விஜய்யை வெகுவாக புகழ்ந்தவர் சீமான். எனவே, நாதக சார்பு பொது வாக்குகள் தவெக பக்கம் போகும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே, விஜய் மீது கடுமையான தாக்குதலை தொடங்கி தனக்கான வாக்கு வங்கியை தக்கவைக்கும் வகையிலேயே இப்போது பேச ஆரம்பித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோது, அவரை தடாலடியாக விமர்சித்தவர் சீமான். அதே பாணியில்தான் தற்போது விஜய்யை தாக்க ஆரம்பித்துள்ளார். அதாவது, விஜய்க்கு கொள்கையே இல்லை, விஜய்யிடம் இருப்பது ரசிகர்கள் மட்டுமே, தவெகவுக்கு பொதுப் பார்வை இல்லை எனும் கோணத்தில் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார் சீமான்.
விஜய் இப்போதுவரை ஒரு சில அறிக்கைகள் – போராட்டங்கள், பனையூர் சந்திப்புகள் மூலமே கட்சியை கொண்டு செல்கிறார். மறுபக்கம் சீமான், ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் உரிமை, செஞ்சிக் கோட்டை மீட்பு, திருச்செந்தூர் தமிழ் குடமுழுக்கு போராட்டம் என அடித்தளம் வரை வேலை செய்கிறார். இவற்றில் எது எடுபடுகிறது என்பது தேர்தலின்போதே தெரியும்.
விஜய் இப்போது வரை திமுக, பாஜகவின் பெயரை சொல்லிக்கூட அதிகம் விமர்சிப்பதில்லை. அதுபோல முதல்வர் ஸ்டாலினையோ, பிரதமர் மோடியையோ பெயரைச் சொல்லி விமர்சிப்பதையும் தவிர்த்துவிடுவார். ஆனால், சீமான் எல்லோரையும் தடாலடியாக விமர்சிப்பவர். இதுதான் இளைஞர் வாக்குகள் தனக்கு விழுவதற்கு காரணம் என்றும் நம்புகிறார் சீமான்.
“கொள்கை என்ன என்று கேட்டால் தளபதி, தளபதி என கத்துகின்றனர்; அது எனக்கு தலைவலி என கேட்கிறது. டிவிகே டிவிகே என கூச்சலிடுகின்றனர். டீ விற்பதாக இருந்தால் ஓரமாய் போய் விற்பனை செய்யுங்கள்… புலி வேட்டைக்குச் செல்லும்போது இடையில் உலவும் அணில் குஞ்சுகள்…” என்கிற ரீதியில் நாதகவை புலியாகவும், தவெகவை அணிலாகவும் ஒப்பிட்டு விளாசியிருக்கிறார் சீமான்.
சீமான் இவ்வாறாக கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், மதுரை மாநாட்டில் அதற்கு விஜய் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கின்றனர் தவெகவினர். விஜய் என்ன சொல்லப் போகிறார் என பார்ப்போம்.