‘விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பாவமல்ல, சாபம்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருக்கு திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் கண்டனம் தெரிவி்த்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதனால், கூட்டணி மாற்றம் தொடர்பான பேச்சு எழுந்தது. இதுதொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் அது ஒன்றும் பாவம் இல்லையே?’’ என்று கூறியிருந்தார்.
விஜய்யுடன் ராகுல் பேச்சு:
இந்நிலையில், திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஜய்யை பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக பார்க்கும் நிலையில், அவரிடம் ராகுல் பேசியதை நாங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பாவமா என திருநாவுக்கரசர் கேட்பது எதிர்கால நம்பிக்கைக்கு உகந்தது அல்ல. திமுகவினருக்கும் கர்நாடகத்தில் ஆட்சியில் பங்கு கேட்க ஆசைதான். அதேபோல், புதுச்சேரியில் ஆட்சிக்கு திமுக தலைமை தாங்க ஆசைதான். அதை பேசினால் தவறில்லை என்று திருநாவுக்கரசர் கூறுவாரா?
ஒரே கூட்டத்தை ஊர் ஊராக அழைத்துச் சென்று, ஒரே இடத்தில் நின்று கலாட்டா செய்வதைக் கண்டிக்காதது ஏன்? இறந்தவர்கள் அனைவரும் கரூர் இல்லை. தருமபுரி, திருப்பூர், நாமக்கல், ராமநாதபுரம், நெல்லை என பட்டியல் நீளும் நிலையில் அதை ஏன் கண்டிக்கவில்லை? மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு அப்போலோவில் மருத்துவம் பார்க்கிறேன் என்று ஒரு அறிக்கைகூட விடாத விஜய்யை கண்டியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.