சென்னை: கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவரின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் பிரச்சாரம் மேற்கொள்ளவர் என அக்கட்சி அறிவித்தது. அதன்படி சுற்று பயண விவரங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளை முதல் 2 வாரங்கள் அவர் சுற்றுப்பயணம் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (செப்.27) அன்று நாமக்கல் மற்றும் கரூரில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சூழலில்தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.