திருச்சி: தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். காவல் துறை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து ஒழுங்குபடுத்தவில்லை என்ற அதிருப்தியும் ஏற்பட்டது.
திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட தவெக தலைவர் விஜய் காலை 9.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை காண்பதற்காக அவரது ரசிர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் திருச்சி விமான நிலையத்தில் திரண்டனர். அவர்களை விஐபி லாஞ்ச் அருகே செல்லாத வகையில், போலீஸார் 500 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
விமான நிலைய விஐபி லாஞ்சில் இருந்து வெளியே வந்த விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதைப் பார்த்ததும் கூட்டத்தினர் விஜய்யை பார்க்கும் ஆவலில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்தனர். ஆனால், அங்கு குறைந்தளவு போலீஸார் மட்டுமே இருந்ததால், விஐபி லாஞ்சில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஓடிச் சென்று கூட்டத்தினர் தடுத்து நிறுத்தினர்.
விஜய்யின் பிரச்சார வாகனம் புறப்பட்டதும் வாகனத்தை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டனர். இதனால், விஜய்யின் வாகனம் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றது. விஜய்யின் பிரச்சார வாகனத்துடன் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் புடைசூழ சென்றனர்.
விஜயின் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக திருச்சி விமான நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பயணிகள் உள்ளேயும், வெளியேவும் செல்ல முடியாமல் தவித்தனர்.
திருச்சிக்கு அடிக்கடி விஐபிக்கள், விவிஐபிக்கள் வரும் மாநகரம் என்பதால் எப்போதும் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும். ஆனால், இன்றைய விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் காவல் துறை பாதுகாப்பு என்பது பெயரளவில்தான் இருந்தது.
வழக்கமாக, ஆளுநர், முதல்வர், பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் வரும்போது திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 1000-க்கும் குறையாமல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஆனால், இன்றைய பிரச்சாரத்தின்போது வெறும் 600 போலீஸார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவோ ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இதனால் இன்று காலையில் இருந்து மாலை திருச்சி மாநகரத்தின் பிரதான பகுதிகளில் பொது போக்குவரத்துக்கு தடையும், போக்குவரத்து நெரிசல் சிக்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியினர்.
விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் காலை 8 மணி முதலே தவெக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இணையாக இளம்பெண்கள், இளைஞர்கள், குடும்ப பெண்மணிகள் மரக்கடையில் குவிந்தனர். உற்சாக மிகுதியில் ஆட்டம், பாட்டம், கூக்குரல் எழுப்பினர். 5 மணி நேரம் வரையிலான காத்திருப்பு, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத காரணத்தினால் பலர் மயக்கமுற்றனர்.
திருச்சி விமான நிலையம் துவங்கி, மரக்கடை பிரச்சார செய்யும் இடம் வரையிலும் விஜய் பார்க்க வந்த தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் நெரிசலில் சிக்கி தொலைத்த 1,000-க்கும் மேற்பட்ட காலணிகள் சிதறிக் கிடந்தன.
விஜய்யை காண வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பெண்கள், இளம்பெண்கள் குறிப்பாக பள்ளி சிறுவர், சிறுமிகள், கல்லூரி மாணவ, மாணவிகளை அதிகளவில் காண முடிந்தது. அதேபோல நடுத்தர வயது பெண்களும் கூட்ட நெரிசலால் ஏற்படும் ஆபத்தை உணராமல் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்தனர்.