சென்னை: தவெக தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது போல், சாலை வழிப் பரப்புரையில் எவ்வளவு பேர் திரளுவார்கள் என மதிப்பிட்டு, அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இருந்தது தமிழக வெற்றிக் கழக தலைமையின் கடுமையான தவறாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூர் மாநகரில் சாலை வழி பரப்புரை செய்தார். இந்த நிகழ்வில் திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும், உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நா.பெரியசாமி, திருச்சி எம்.செல்வராஜ், மாவட்டச் செயலாளர்கள் கே.கலாராணி (கரூர்) அ.மோகன் (சேலம்) கே.எம்.இசாக் (திருப்பூர் புறநகர்) எஸ்.சிவா (திருச்சி மாநகர்) எஸ்.ராஜ்குமார் (திருச்சி புறநகர்) கே. அன்புமணி (நாமக்கல்) எஸ்.டி.பிரபாகரன் (ஈரோடு தெற்கு) அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம், செயலாளர் பா.தினேஷ், இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், திருப்பூர் காட்டே சி.ராமசாமி, கரூர் கே.என்.நாட்ராயன் உள்ளிட்டோர் கொண்ட பிரதிநிதிக் குழு இன்று (28.09.2025) மதியம் 01.30 மணிக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றது.
அங்கு கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் கூறியது. உயிரிழந்தோர் குடும்பங்களின் நெருங்கிய உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியது.
அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சிறப்பாக சேவை புரிந்து வந்தது பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. கரூர் – ஈரோடு சாலையில் உள்ள வேலுசாமிபுரம் சென்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலில் அறிவித்த நேரத்தை மாற்றி தாமதமாக அங்கு வந்தது கூட்ட நெரிசலுக்கு முதன்மை காரணமாக இருந்தது.
படிப்படியாக கூட்டம் அதிகரித்து வந்த போது, ஆரம்பத்திலிருந்து காத்திருந்தவர்கள், தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வெளியேற முயற்சித்த போது தடுத்து நிறுத்தப்பட்டதும், வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு குடி தண்ணீர் வழங்க ஏற்பாடு இல்லாததும், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி சிறுவர்கள், சிறுமிகள் கீழே விழுந்ததும், அவர்களை உடனடியாக வெளியே எடுத்துச் சென்று சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு இல்லாததும் அடுத்தடுத்த காரணங்களாக அமைகின்றன.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்யும் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது போல், சாலை வழிப் பரப்புரை மையத்தில் எவ்வளவு பேர் திரளுவார்கள் என மதிப்பிட்டு, அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் இருந்தது தமிழக வெற்றிக் கழக தலைமையின் கடுமையான தவறாகும். இந்தக் கட்சியின் தலைவர் வேறு பல இடங்களில் சாலை வழிப் பயணத்தின் போது கூடிய கூட்டத்தை கருத்தில் கொள்ளாமல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய எண்ணிக்கையை மட்டுமே கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் பரிசீலனைக்குரியது என்பதை கட்சியின் பிரதிநிதிக் குழு தெரிவித்துக் கொள்கிறது.
இந்தத் துயர நிகழ்வு விபரங்கள் காதுக்கு எட்டியதும் போர்க்கால வேகத்தில் அரசு செயல்பட்டிருப்பதும், உடனடியாக முதல்வரே, களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதும் நல்ல முன்னுதாரணமாகும். இந்த நிலையில் அரசின் மீதும், ஆளும் கட்சியின் மீதும் விமர்சனங்களை முன் வைப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முற்றாக நிராகரிக்கிறது. மற்ற விபரங்களை விசாரணை ஆணைய விசாரணையில் முன் வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.