சென்னை: இது சினிமாவுக்கான களம் அல்ல. விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது என மநீம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் தொடர்பான மண்டல அளவிலான கலந்தாலோசனை கூட்டங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த செப்.18-ம் தேதி முதல் சென்னையில் நடத்தி வருகிறது.
அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்து மண்டல வாரியாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் கடந்த 18-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து கோவை, மதுரை மண்டல நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் 19-ம் தேதியும், நெல்லை, திருச்சி மண்டல நிர்வாகிகளுடனான கூட்டம் 20-ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து சேலம் மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களுக்காக அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல் வாதிகளாக பார்க்காமல், அவர்களுக்கு கூடும் கூட்டங்களை அவரை பார்ப்பதற்காக கூடும் கூட்டமாகவே பார்ப்பதாக தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கின்றனர்.
அவருக்கு முன்பு சினிமாவில் இருந்து வந்த என்னை பற்றி என் கட்சியினரிடம் கேட்டால் தெரியும். என்னை ஏன் நாடி வந்தார்கள் என்று. அரசியலுக்கு வருபவர்களை மட்டுமின்றி, நடிக்க வருபவர்களையும் கூட விமர்சிக்கத்தான் செய்வார்கள்.
இது சினிமாவுக்கான களம் அல்ல. அதை புரிந்துகொண்டவர்கள் இங்கு இருக்கின்றனர். இங்கு கூடக்கூடிய கூட்டங்கள் அனைத்தும் வாக்குகளாக கண்டிப்பாக மாறாது. அது விஜய்க்கும் பொருந்தும்.
எனக்கும் பொருந்தும். எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். கூட்டத்தை சேர்த்துவிட்டால் அது வாக்குகளாக மாறாது. நல்ல பாதையில் செல்லுங்கள். தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காக செய்யுங்கள் என்பது தான் எல்லா அரசியல் வாதிகளுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள்.
அந்தவகையில் எத்தனை பேர் அரசியலுக்கு வந்தாலும் நல்லது தான். திமுக தலைமையுடன் நெருக்கமாக இருக்கிறோம். இருந்தாலும் கூட்டணிக்கான இடங்கள் உட்பட 75 ஆண்டுகால கட்சியிடம் அனைத்து உரிமைகளையும் தட்டி கேட்டு பெற்றுவிட முடியாது. எங்களது தகுதியை நிரூபித்து, பின் எங்களுக்கானதை கொடுங்கள் என்று கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.