தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அரவமும் இல்லாமல் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் வழக்கமான ‘மவுனத்தில்’ இருக்கிறார்.
ரங்கசாமியை கைக்குள் வைத்துக் கொண்டு இம்முறையும் புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துவிட வேண்டும் என கணக்குப் போடுகிறது பாஜக. ஆனால், பிரதமருக்கு நெருக்கமான புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனுடன் தொடக்கத்தில் இணக்கமாக இருந்த ரங்கசாமி இப்போது அவரோடு முரண்பட்டு நிற்கிறார். சுகாதாரத் துறை இயக்குநராக ஆளுநர் ஒருவரை நியமிக்க, அதை நிராகரித்து முதல்வர் ஒருவரை நியமித்தார். இது இருவருக்கும் இடையில் மோதலாக வெடித்தது. இந்த விவகாரத்தில் தனது அதிருப்தியைக் காட்டும் விதமாக சட்டப் பேரவைக்கு போகாமல் தவிர்த்தார் முதல்வர் ரங்கசாமி.
இதையடுத்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுச்சேரிக்கு வந்து ரங்கசாமியின் வீட்டுக்கே போய் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரங்கசாமி வைத்த சில நிபந்தனைகளை அமித் ஷாவிடம் சொல்லி நிறைவேற்றித் தருவதாக சுரானா கொடுத்த உத்தரவாதத்தை அடுத்து சட்டப்பேரவைக்கு திரும்பினார் ரங்கசாமி.
இந்த நிலையில், டெல்லியில் ரங்கசாமி சந்திப்புக்கு அமித் ஷா நேரம் ஒதுக்கினார். ஆனால், அவர் சொன்ன தேதியை விட்டு இன்னொரு தேதியில் சந்திப்பதாக ரங்கசாமி சொன்னதால் அந்த சந்திப்பு நிகழாமலே போனது. அண்மையில் தமிழகம் வந்த பிரதமரையும் ரங்கசாமி சந்திக்க மெனக்கிடவில்லை.
பாஜக உடன் தான் இத்தனை பஞ்சாயத்து என்றால், அண்மையில் கூட்டணிக்குள் வந்த அதிமுக-வையும் பாராமுகமாகவே வைத்திருக்கிறார் ரங்கசாமி. அண்மையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு வந்த இபிஎஸ், புதுச்சேரியில் தான் தங்கினார். அவரை வந்து சந்தித்துப் பேசும்படி அதிமுக-வினர் வைத்த கோரிக்கையை நிரகாரித்த ரங்கசாமி, தனக்குப் பதிலாக தனது கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயபாலை சம்பிரதாயமாக அனுப்பி வைத்தார்.
கூட்டணிக் கட்சிகளை இப்படியெல்லாம் உதாசீனம் செய்யும் ரங்கசாமி, புதுச்சேரியில் பிறந்தநாள் கொண்டாடிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை அவரது வீட்டுக்கே சென்று வாழ்த்தினார். அண்மையில் தனது பிறந்தநாளுக்கு போனில் வாழ்த்துச் சொன்ன நடிகர் விஜய்யுடன் உற்சாகமாக பேசி, அவர் வெற்றி பெறவும் வாழ்த்துச் சொன்னார்.இதுபற்றி எல்லாம் நம்மிடம் பேசிய புதுச்சேரி அதிமுக-வினர், “தமிழகத்தில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி செயல்படுகிறது. ஆனால் புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் தலைமையின் கீழ் என்டிஏ கூட்டணி செயல்படுகிறது.
அப்படி இருக்கையில் கூட்டணி தலைமை தான் மற்ற கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும். அதைவிடுத்து, ரங்கசாமி இப்படி யாருக்கோ வந்த திருவிழா கணக்காய் உட்கார்ந்திருக்கிறார். 2021 தேர்தலில் புதுச்சேரியில் அதிமுக ஓரிடத்தில் கூட வெல்ல முடியாமல் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டது. அதை மனதில் வைத்துக்கொண்டு தானோ என்னவோ, புதுச்சேரிக்கு வந்த இபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்திருக்கிறார் ரங்கசாமி. ஆனால், 2011-ல் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ரங்கசாமி அன்றைக்கு அதிமுக கூட்டணி வைக்காமல் போயிருந்தால் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்றனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் முன்பே 2021-ல் பனையூர் வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்துப் பேசியவர் ரங்கசாமி. அவருக்கும் புஸ்ஸி ஆனந்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட இபிஎஸ்ஸுக்கு கொடுக்காத ரங்கசாமி, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். அதனால் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது புதுச்சேரி என்டிஏ கூட்டணி.