திருநெல்வேலி: “ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களது உணர்வின் வடிகாலாய் விஜய் இருக்கிறார். அதனாலேயே பெண்களும் இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள். விஜய் மட்டுமே ஆட்சி அமைத்து விட முடியாது. நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டால் அவரது தேர்தல் வியூகம் சரியாக இருக்கும்” என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்குப்பின் 2 கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்தக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிரான மனநிலையின் வெளிப்பாடுதான் விஜய் நிகழ்ச்சிகளுக்கு கூடும் கூட்டம். இது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாய் விஜய் இருப்பதை வெளிக்காட்டுகிறது. அதேநேரத்தில் விஜய்யின் செல்வாக்கு வாக்குகளா மாறுமா என்பது அவரது திறமையையும், கட்சியின் வியூகங்களையும் பொறுத்தது.
விஜய் மட்டுமே ஆட்சி அமைப்பது கடினம். நல்ல நண்பர்களை சேர்த்துக் கொண்டால் தேர்தலில் அவரது வியூகம் சரியாக இருக்கும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சாத்தியமாகும்போது தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி ஏன் சாத்தியமாகாது?
இப்போதுள்ள அமைச்சர்களாலும் சட்டப் பேரவை உறுப்பினர்களாலும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மாற்ற முடியாது. எங்களைப் போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைக்கு வந்தால்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆட்சியில் பங்கு என்பது எங்களது வெற்று கோஷமல்ல. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான் 2026 தேர்தல் களம்.
கிராமங்களில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகப்படியாக காணப்படுகிறது. சமூக வேறுபாடுகள் இருந்த இடத்தில் இப்போது பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டது. தமிழகத்தில் நடக்கக்கூடிய எந்த பிரச்சினையையும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள், முதலமைச்சரிடம் தெரிவிப்பதில்லை. யதார்த்தமான உண்மை நிலையை கூட எடுத்து சொல்வது கிடையாது.
மக்கள் வறுமையின் உச்சத்தில் உள்ளனர். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைப்பதற்கான எந்த வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. வரும் ஜனவரி மாதம் மாநில மாநாட்டில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று இந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய புரட்சி வெடிக்கும்.
ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சாரார் மட்டுமே வளர்ந்து கொண்டேபோனால் தமிழகத்திலும் கொந்தளிப்பு உருவாகத்தான் செய்யும். அதன் வெளிப்பாடாக 2026-ல் ஆட்சி மாற்றம் வரும். செங்கோட்டையன் விவகாரம் அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை. அவர்களுக்குள்ளேயே அவர்கள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.
தென் தமிழகத்தில் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவை வளர்ச்சி அடையாமல் இருக்கிறது. தென் தமிழகம் சென்னை போன்ற வடதமிழகத்தை போலவும் மேற்கு தமிழகத்தை போலவும் வளர்ச்சி அடையவில்லை. வேலைவாய்ப்பு, தொழில் ஆகியவை தென் மாவட்டங்களுக்கு கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தி வருகிறது.
தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் உள்ளூர் மக்களுக்குத்தான் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் உள்ளூர் மக்களை தொழிற்சாலைகள் புறக்கணித்து வருகிறது. ஒடிசா, பிஹார், ஆந்திர மக்களுக்குத்தான் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து 50 முதல் 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
தொழிற்சாலைகளே இல்லாமல் இருக்கும் தென் மாவட்டங்களில் வேளாண்மையும் சரிவர இல்லாமல் இருப்பதால் கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 நாள் வேலை திட்டமும் சரிவர பலருக்கு வழங்கப்படவில்லை. இதில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. எனவே மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.