விஜயகாந்த் பெயரை மதுரை மாநாட்டில் விஜய் குறிப்பிட்டது முதலே அரசியல் களத்தில் பல்வேறு யூகங்கள் முளைக்க தொடங்கின. விஜயகாந்த் மீதான விஜய்யின் திடீர் பாசம் குறித்த கேள்விகளும் எழ ஆரம்பித்துள்ளது. இதே கேள்வியை பிரேமலதாவும் வலுவாக எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மதுரை தவெக மாநாட்டில் பேசிய விஜய், “நான் இந்த மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப பிடிச்சது எம்ஜிஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே அவரை மறக்க முடியுமா” என்று கூறினார்.
விஜய்யின் இந்தப் பேச்சு தேமுதிகவுடனான கூட்டணிக்கு அச்சாரம், விஜயகாந்த் ஆதரவு வாக்குகளை கைப்பற்றும் அரசியல் வியூகம் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இந்த பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் பிரேமலதா. விஜய்யின் பேச்சுக்கு ரியாக்ஷன் கொடுத்த அவர், “ஒரு நாளும் யாரும் விஜயகாந்தாக மாறிவிட முடியாது. விஜயகாந்தின் வாக்குகளை விஜய் பிரிக்க நினைத்தால் மக்கள் ஏற்கமாட்டார்கள். விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதாலேயே கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்றில்லை.
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த போது, உடல்நிலை பாதிப்படைந்து இருந்தபோதெல்லாம் அவரை சந்திக்கவில்லை, அப்போது அண்ணனாக தெரியவில்லை. விஜயகாந்த் மறைந்து இத்தனை ஆண்டுகள் தாமதமாகத்தான் அவரை தெரிகிறதா என உலகம் அறிந்த உண்மையை சீமான் உரக்க சொல்லி இருக்கிறார். சீமான் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை” என்று பிரேமலதா பேசியது தவெகவுக்கு திகிலை கிளப்பியுள்ளது. பிரேமலதாவின் இந்த ரியாக்ஷன் விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதே உண்மை.
விஜயகாந்த் பெயரில் அரசியலா? – விஜய்யின் அப்பா எஸ்ஏசி விஜயகாந்தை வைத்து 17 படங்களை இயக்கியுள்ளார், இதில் பெரும்பாலானவை வெற்றிப் படங்கள். அதுபோல விஜய்க்கு ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் நடித்து மிகப் பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்தவர் விஜயகாந்த். ஆனாலும், விஜய் கரியரில் பிஸியான பின்னர் இருவரும் தனித்தனி டிராக்கில் பயணித்தனர்.
இப்போது அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜயகாந்தை புகழும் விஜய், அவர் தேமுதிகவை தொடங்கியது முதல் அதுகுறித்து எதுவும் பேசியதில்லை. இது தொடர்பாக பொதுத் தளத்தில் பல்வேறு விமர்சனங்களும் எழ ஆரம்பித்துள்ளன.
தவெகவின் முதல் மாநாட்டில் எதுவும் பேசாமல், இப்போது விஜயகாந்த் குறித்து விஜய் பேசியதற்கு பின்னால் மூன்று காரணங்கள் உள்ளன. தற்போதுவரை தவெகவால் ஒரு கட்சியை கூட கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை. எனவே, எப்படியாவது தேமுதிகவை தன் பக்கம் கொண்டுவந்தால், அதன் மூலம் இன்னும் சில கட்சிகளை கொண்டு வரலாம் என்பது முதல் கணக்கு.
விஜயகாந்துக்கு இப்போதுவரை விளிம்புநிலை மக்கள், பெண்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு உண்டு. தேமுதிக கட்சி ஆரம்பித்தபோது பெரும் வரவேற்பை பெற்று, பின்னர் செல்வாக்கு சரிந்தாலும், விஜயகாந்த் என்ற பிம்பத்துக்கான மவுசு எப்போதும் குறைந்ததே இல்லை. விஜயகாந்தின் மனிதநேயத்துக்கும், தடாலடி பேச்சுக்கும், இயல்பான நடிப்புக்கும் இப்போதும் ஃபாலோயர்ஸ் அதிகம். எனவே விஜயகாந்தை கையில் எடுப்பதன் மூலம் அவர்களை கவரலாம் என்பது விஜய்யின் இரண்டாவது கணக்கு.
மூன்றாவது கணக்கு முக்கியமானது. விஜயகாந்த் புதிதாக கட்சி தொடங்கி 10 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கியை பெற்றவர். அதாவது தமிழகத்தில் மாற்றத்தை விரும்பிய வாக்காளர்களின் தேர்வாக அப்போது இருந்தவர் விஜயகாந்த். எனவே, இப்போது மாற்றத்தை உருவாக்குவேன் என்று பேசும் தனக்கு அந்த வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் கிடைக்கும் என நம்புகிறார் விஜய்.
இதனை தவிர்த்து, விஜய்க்கு வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகளவில் செல்வாக்கு உள்ளது. இந்த இரு பகுதியிலும் ஏற்கெனவே செல்வாக்கு செலுத்தியவர் விஜயகாந்த். 2024 தேர்தலில்கூட விருதுநகரில் விஜயகாந்த் மகன் நூழிலையில் வெற்றிவாய்ப்பை இழந்தார். எனவே, விஜயகாந்தை பிளக்ஸ்களில் பயன்படுத்துவது, பேச்சில் புகழ்வது என அரசியல் செய்தால் தவெகவுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும் எனவும் கணக்குப் போடுகிறார் விஜய்.
விஜயகாந்தின் மறைவுக்குப் பின்னர் பல அரசியல் தலைவர்களும் அவரை புகழ்பாடவும், புகைப்படத்தை பயன்படுத்தவும் ஆரம்பித்துவிட்டனர். ஏனென்றால், மேற்சொன்ன கணக்குகள் அவர்கள் மத்தியிலும் உண்டு. ஆனால், சினிமாக்காரர் என்ற வகையில் தனக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் என்பது விஜய்யின் எண்ணம்.
தமிழக அரசியலில் குறுகிய காலத்தில் தடம் பதித்தவர் விஜயகாந்த். அவர் உருவாக்கிய தேமுதிக இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. இந்தச் சூழலில், விஜயகாந்தை வைத்து இப்போது பின்னப்படும் வியூகங்கள் விஜய்க்கு கைகொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.