விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமித்து கட்சியை வளர்க்கலாமா என பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் சிலரே மாவட்டச் செயலாளர் பதவிகளையும் உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு தொங்குவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அதிமுக-வினர் புலம்புகிறார்கள். அதுவும் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தப் புலம்பல் சற்று சத்தமாகவே கேட்கிறது.
அதிமுக துணைப் பொதுச்செயலாளரான நத்தம் இரா.விசுவநாதன் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அதேபோல் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான திண்டுக்கல் சி.சீனிவாசன் மாநில பொருளாளராக இருக்கிறார். முன்னாள் அமைச்சர்களான இவர்கள் இருவரும் இப்போது எம்எல்ஏ-க்களாகவும் இருக்கிறார்கள்.
இத்தனை பொறுப்புகளை வைத்திருக்கும் இவர்கள் இருவரும், மாவட்ட அரசியலில் அவ்வளவாய் கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள். மாவட்ட அளவிலான கட்சிக் கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் மட்டுமே தலைகாட்டிவிட்டுப் போகும் இவர்களால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மந்த நிலைக்குப் போய்விட்டதாக மற்ற நிர்வாகிகள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய அவர்கள், “அம்மா காலத்தில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதில் கண்டிப்புடன் இருந்தார். ஆனால் இப்போது, அந்தக் கண்டிஷன் இல்லை. அதட்டிப் பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசனும் நத்தம் விசுவநாதனும் அப்படித்தான் இரண்டு பதவிகளில் இருக்கிறார்கள். தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மாநிலப் பதவியில் இருக்கும் இவர்கள், மாவட்ட அரசியலில் யாரும் தங்கள் கைமீறி போய்விடக் கூடாது என்பதற்காக மாவட்டச் செயலாளர் பதவிகளையும் விடாமல் கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
அம்மா காலத்தில் ஒழுங்காக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை உடனுக்குடன் மாற்றிவிடுவார். இப்போது அந்த பயம் இல்லாததால் இருவருமே பெயரளவுக்கே மாவட்டச் செயலாளர் பதவியை வைத்திருக்கிறார்கள். எழுபது வயதைக் கடந்து விட்ட இவர்களால் எப்படி கட்சியை வளர்க்க முடியும் என்று தலைமையும் யோசிக்கவில்லை. திண்டுக்கல் சீனிவாசனுக்கு வலதுகரமாக அவரது தம்பி மகனும், ஒன்றியச் செயலாளருமான ராஜசேகர் இருக்கிறார்.
அதேபோல் நத்தம் விசுவநாதன் தனது மைத்துனர் கண்ணனை வலதுகரமாக வைத்திருக்கிறார். திமுக மாவட்டச் செயலாளர்களைத்தான் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதாகச் சொல்வார்கள். ஆனால், இந்த மாவட்டத்தில் இவர்கள் இருவரும் தான் குறுநில மன்னர்களைப் போல் செயல்படுகிறார்கள். இதனால் மற்றவர்களின் அரசியல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. புதிதாக அரசியலுக்கு வர நினைக்கும் இளைஞர்களும் அதிமுக-வுக்கு வர தயங்குகிறார்கள்” என்றனர்.
முன்பு திமுக மாவட்டச் செயலாளராக இருந்த ஐ.பெரியசாமியும், நத்தம் விசுவநாதனும் ஒருவர் தொகுதியில் மற்றவர் வெயிட்டான வேட்பாளரை நிறுத்த மெனக்கிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியது. இதனால் 2016-ல் ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமியை எதிர்த்து நத்தம் விசுவநாதனையே மோதவிட்டார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் விசுவநாதன் தோற்றுப் போனார். அப்படி எல்லாம் பந்தாடி படிப்பினை கொடுக்கும் தைரியம் இப்போதுள்ள அதிமுக தலைமைக்கு இருக்குமா?