சென்னை: தமிழகம் முழுவதும் விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனி கவனம் செலுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பணிவரன்முறை அரசு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளிடம், அமைச்சர் எஸ்.ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
புதிய குற்றவியல் நடைமுறை சட்டமான பிஎன்எஸ்எஸ் 2023-ல் நடைமுறைக்கு வந்தபிறகு கடந்த 3 மாதங்களாக காலியாக இருந்த தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்(வு)த் துறையின் இணை இயக்குநர் பதவிக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆர்.சேகர் துரை பொறுப்பேற்றுக் கொண்டார்.
டிஎன்பிஎஸ்சி மூலமாக 1996-ம் ஆண்டு உதவி அரசு வழக்கறிஞராக பணியில் சேர்ந்து, பல்வேறு சட்டம் சார்ந்த நிலைகளில் பணிபுரிந்த அவரை தற்போது தமிழக அரசு இத்துறையின் இணை இயக்குநராக நியமித்துள்ளது. இந்நிலையில், இணை இயக்குநர் சேகர்துரையின் நியமனத்துக்கும், குற்ற வழக்கு தொடர்(வு)த் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 40 புதிய உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை உருவாக்கியதற்கும், நீண்டகாலமாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த பதவி உயர்வை வழங்கியதற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி மூலமாக குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் தமிழ்நாடு பணிவரன்முறை அரசு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பி்ல் சங்கத் தலைவர் ஐடன் ஐசன், செயலாளர் சி.ராமசாமி, பொருளாளர் எஸ்.நந்தகுமார், துணைத் தலைவர்கள் எஸ்.ஜூட் ஆஞ்சலோ, ஜெப ஜீவராஜா, இணைச்செயலாளர்கள் சி.கண்ணன், கே. ஜெயகார்த்திகா, ஏ.மோகன் உள்ளிட்டோர், சட்டத் துறை அமைச்சரான எஸ்.ரகுபதியை சந்தித்து, அவருக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர்.
அப்போது விசாரணை நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையைத் துரிதப்படுத்தவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தனி கவனம் செலுத்தவும், தண்டனை சதவீதத்தை அதிகரிக்கவும், குற்றவியல் அரசு வழக்கறிஞர்களின் பணித்திறன் மீது கவனம் செலுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சங்க நிர்வாகிகளிடமும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை இயக்குநரிடமும் அமைச்சர் வலியுறுத்தினார்.