சென்னை: ‘திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான தற்கொலைகள் மற்றும் விபத்து உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மொத்தம் 19,483 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 22,686 பேர் தற்கொலை செய்துகொண்ட மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்தான்.
விவசாயிகள் வாழ வழியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதையே இது காட்டுகிறது. இதற்கு முன் 2022-ம் ஆண்டில் 738 விவசாயிகளும், 2021-ம் ஆண்டில் 599 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை செயது கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றில் முதன்மையானது விவசாயிகளால் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததுதான். அதுகுறித்த எந்தக் கவலையும் இல்லாத திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.