புதுக்கோட்டை: தமிழகத்தில் வாரிசு ஆட்சிக்கு முடிவுகட்ட அதிமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: விவசாயிகள் நலனுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.14,400 கோடியில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை கொண்டுவந்தோம்.
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இத்திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,306 கிராம மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.574 கோடியில் கொண்டுவரப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் திமுக சரிவர செயல்படுத்தவில்லை.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் திரளும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த பிறகும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுகவினருக்கு மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நினைப்பு வருமா? 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்துவது, காஸ் சிலிண்டர் மானியம், கல்விக் கடன் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும், கந்தர்வக்கோட்டையில் முந்திரிக் கொட்டைகளை உடைப்பதற்கு அரசு மானியத்தில் நவீன கருவிகள் வழங்கப்படும். வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை.
அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதுமே திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் இக்கூட்டணியை மதவாதக் கூட்டணி என்று விமர்சிக்கிறார்கள். பாஜகவோடு திமுக ஏற்கெனவே கூட்டணி வைத்தபோது அது தெரியவில்லையா? வரும் 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 48 வகையான பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போவதாக கூறுகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியவில்லையா? குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைக்கவும், விலைவாசி குறையவும், மக்கள் நிம்மதியாக வாழவும் அதிமுகவை பொதுமக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ஆலங்குடி, அறந்தாங்கியில் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.