சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.30ம் தேதி) முதல் 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை (செப்.30-ம் தேதி) உருவாகக்கூடும். இதன் காரணமாக, அக்.1-ம் தேதி வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.30), நாளை மறுதினமும் (அக்.1-ம்) ஓரிரு இடங்களிலும், அக்.2 முதல் அக்.5-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.30-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை (செப்.30 தேதி) சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4 செ.மீ மழை, சேலம் மாவட்டம் ஏற்காடு, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை, நீலகிரி மாவட்டம் தேவாலா, பார்வூட், மேல் பவானி, விண்ட் வொர்த் எஸ்டேட், கோவை மாவட்டம் சிறுவாணி அடிவாரம், சின்னக் கல்லார், சோலையார், தேனி மாவட்டம் பெரியாறு, சேலம் மாவட்டம் டேனிஷ் பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர் விளை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.